14 Dec 2017

துணிக்கடை வர்த்தகர்கள் மாணவர்களிடமிருந்து வவுச்சர்களைப் பலவந்தமாகப் பெற்று சீருடைத் துணி விநியோகம்

SHARE
பாடசாலை இறுதித் தவணை விடுமுறையின்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைத்துணி வவுவுச்சர்களைப் பெற்றுக் கொள்வதில் புடவைக் கடை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அலைகின்றனர்.
மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து வவுச்சர்களைப் பெற்றுக் கொண்டு வீடு நோக்கி வீதியால் வரும்போது சில தெருவோரு புடவைக் கடை வியாபாரிகள் மாணவர்களை வழி மறித்து அவர்களது பையிலிருந்த வவுச்சர்களைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக வெள்ளைத் துணிகளை வழங்கியுள்ளனர்.
இச்சம்பவம் பரவலாக இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மாணவர்களுக்கு தெருவோர வியாபாரிகளால் பலவந்தமாக வவுச்சரைப் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்ட சீருடைத் துணிகளில் சில தரங்குறைந்தவையாக இருந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே “வவுச்சருக்கு பாடசாலைச் சீருடைத்துணி” எனும் பதாதைகளை வாகனங்களில் தொங்கவிட்டபடி இடம்பெயர்  துணிக்கடைகளும் நடமாடித் திரிவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசாங்கத்தால் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத்துணிக்காக  வழங்கப்படும் வவுச்சர்களை அபகரிக்கும் வகையில் அதிபர்களோ வர்த்தகர்களோ மாணவர்களையும் பெற்றோர்களையும் வற்புறுத்தக் கூடாது என கல்வி அமைச்சு கடந்த மாதம் 30ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஆங்காங்கே முறைகேடுகள் நடந்துள்ளன.

இது தொடர்பில் முறைப்பாடு செய்ய விரும்புவோர் கல்வி அமைச்சின் அவசர தொடர்புக்காக 1988 என்ற இலக்கத்தைப் பயன்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: