வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் அரசாங்கத்தை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும், கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை (10) நடத்தினர்.
இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700 இற்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர்.
காணாமல்போனவர்களின் படங்களை ஏந்தியவாறு கண்ணீர் சிந்தியவண்ணம், இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் அமைக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அந்த அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்படும்போது, அதன் பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விசாரணைகள், சர்வதேச கண்காணிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும்போதே அதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்படும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தமக்கான குரல்கொடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில், தாங்கள் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலையிருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பேரணி, கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது. அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இணையத்தின் பிரதிநிதிகள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment