அதிகாரங்களை வைத்துக் கொண்டுள்ள ஆளுநரின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் எந்த வித அபிவிருத்திகளும் இல்லாது முடங்கிப் போயுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னர் அந்த மாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் ஞாயிறு மாலை 05.11.2017 ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
தொடர்ந்து தெரிவித்த நஸீர் அஹமத்,
கிழக்கு மாகாண சபையில் நாம் ஆட்சியிலிருக்கும்போது முன்னெடுத்த அபிவிருத்திகள் அத்தோடு நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை புதிய அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறாது நிதி வங்குரோத்தில் கிழக்கு மாகாண சபை முடங்கிப் போயுள்ளது.
கொந்தராத்துக்களை மேற்கொண்டவர்கள் அப்பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அபிவிருத்திக்கான பணத்தைக் கொண்டு வந்து சேர்க்கின்ற பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.
நான் முதலமைச்சராக இருந்தபோது நிதியமைச்சுப் பொறுப்பையும் எடுத்து உரிய நிதிகளைத் தேடிக் கொண்டு வருகின்ற பணியைச் சரியாகச் மேற்கொண்டதன் விளைவாக அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது.
தற்போது ஆளுநரின் தலைமையின் கீழ் புதிதாக அபிவிருத்திகள் எதுவும் ஆரம்பிக்கப்படாதது ஒருபுறமிருக்க ஏற்கெனவே எம்மால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் முடிவடையாமல் முடங்கிப் போயுள்ளன.
திட்ட மிட்ட சதித்திட்;டமாக கிழக்கு மாகாண அபிவிருத்திகள் முடக்கப்பட்டுள்ளன.
2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றது போன்று ஆளுநரின் பக்கச் சார்பாக அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டுப் புறக்கணிக்கின்ற ஒரு நிலைமையை நாம் தற்போது காண்கின்றோம்.
ஜனநாயகத்துக்கு விரோதமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படாது மாகாண சபை நிருவாகமும் அபிவிருத்தியும் நாடாளுமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். அரசு சுயநலத்திற்காகவே தேர்தலைப் பிற்போட்டுள்ளது.
கிழக்கிலே ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்ற போது கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கு வீசப்பட்டுள்ளார்கள்.
இவ்வேளையில் தற்போதிருக்கும் திராணியற்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.
கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனம் திட்டமிடட்ட முறையில் தாமதப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகின்றது.
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கு சமீபத்தில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளுச்கு மேல் பெற்ற அனைத்துப் பட்டதாரிகளும் நியமனம் செய்யப்பட வேண்டும்.
தற்போது வரை மாதாந்தம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெறும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா மாதாந்தம் ஊதியம் வழங்கும் அனைத்து ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்டிருந்தோம் அதனை ஆளுநர் தட்டிக் கழிக்கின்ற நிலைமை உள்ளது.
இதேவேளை நாம் எடுத்த முயற்சியின் பயனாக பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 45 ஆக மாற்ற முடிந்;தது.
அதற்கமைவாக மனிதாபிமான கோரிக்கையாக 45 வயதைக் கடந்த பட்டதாரிகளையும் நியமனம் வழங்கும் பொறிமுறையில் உள்வாங்க வேண்டும்.
ஆகவே. வயது கடந்த பட்டதாரிகள் மற்றும் ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் ஆகியோரினதும் துயர்களையும் வேதனைகளையும் கருத்திற் கொண்டு அவர்களுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையினை விரைவில் முன்னெடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment