15 Nov 2017

கல்குடா கல்வி வலயத்தில் கல்வி முன்னேற்றத்திற்காக விஷே‪ட செயற்திட்டம் அமுல் வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி

SHARE
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வி  முன்னேற்றத்திற்காக விஷே‪ட செயற்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவ்வலயத்தின் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தெரிவித்தார்.
சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா அந்த அமைப்பின் தலைவர் எஸ். முரளிதரன் தலைமையில் சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் முன்றலில் திங்கட்கிழமை மாலை 13.11.2017 இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட  கல்விப் பணிப்பாளர் ரவி மேலும் தெரிவிக்கையில் கல்குடா கல்வி வலயத்தில் சித்தாண்டிப் பிரதேசம் ஒப்பீட்டளவில் எழுத்தறிவு வீதத்தில் பின்தங்கியுள்ளது.

இதனைச் சீர் செய்து அப்பிரதேசத்தில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்துமுகமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளான கல்வியாளர்களைப் பயன்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரதேசத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் வீடு வீடாகச் சென்று எழுத்தறிவு, வாசிப்பு, விடயங்களில் மாணவர்களுக்குப் போதிக்கும் தொண்டுப் பணியில் ஈடுபடுவார்கள்.

இதேவேளை. சித்தாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் கல்வித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களாக உள்ளார்கள். அலுவலர்களாக ஆசிரியர்களாக வேறு வேறு பிரதேசங்களில் கடமையாற்றும் இவர்களையும்  இணைத்துக் கொண்டு பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டம் வரையப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சித்தாண்டியில் 3 கல்வி நிலையங்களை உருவாக்கி பாடசாலை நேரத்திற்குப் பின்னரான வேளையில் ஆரம்பப் பிரிவுப் பாடசாலை மாணவர்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக் கொடுக்கும் செயற் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

சித்தாண்டிப் பிரதேச ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளில் இருந்து இடை நிலைப் பாடசாலைகளுக்குச் செல்லும்போது பெரும்பாலான மாணவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.” என்றார்.

சிகண்டி அறக்கட்டளை மற்றும் நன்கொடையாளர்களின் நிதியுதவிகளைக் கொண்டு வருடா வருடம் புலமையை வெளிப்படுத்தியோரை கௌரவிக்கும் இந்நிகழ்வில் சித்தாண்டி, ஈரலக்குளம், மாவடிவெம்பு பாடசாலைகளிலுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்குமேல் சித்தி பெற்ற மாணவர்கள், பாடசாலை மட்டங்களில் விளையாட்டு, விவசாய விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், கலை கலாசாரம் போன்றவற்றில் சிறப்பு நிலைகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கும்மி, காவடி, சிறுவர் விளையாட்டுக்களில் மாகாண மட்டம், தேசிய மட்டம் வரை போட்டிக்குச் சென்ற 24க்கு மேற்பட்ட மாணவர்கள் உட்பட கலைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர்கள் என பலர் இதன்போது கௌரவம் பெற்றனர்.

இந்நிகழ்வுக்கு சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் நித்திய பூசகர்கள் உட்பட செங்கலடி பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம், கல்குடா கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, செங்கலடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ். டினேஸ், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளையின் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: