ஏறாவூர் நகரில் கடந்த ஆண்டு செப்ரெம்பெர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை புதன்கிழமை 22.11.2017 ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail Muhammath
Rizvi முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வேளையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் (வயது 32) கணவரான ஐ.எம். மாஹிர் தனது தரப்பு சட்டத்தரணியுடன் நீதிபதியின் முன் ஆஜராகி மேற்படி படுகொலை வழக்கு விசாரணையை பொலிஸாரிடமிருந்து புலனாய்வுத் துறைக்கு பாரப்படுத்துமாறு வேண்டுகோளை முன் வைத்தார்.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வழக்கு விசாரணையில் தனக்கு திருப்தியில்லாதிருப்பதாக அவர் தனது வேண்டுகோளை சட்டத்தரயூடாக நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
படுகொலைச் சந்தேக நபர்களில் இருவர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (நொவெம்பெர் 22, 2017) ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை பிணையில் விடுதலையான ஏனைய நால்வரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியிருந்தனர்.
இவ்வேளையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களில் இருவரையும் டிசெம்பெர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த வருடம் (2016) செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த வருடம் செப்ரெம்பெர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒருவருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் அவர்களில் இருவர் கடந்த செப்ரெம்பெர் மாதத்திலும் மற்றைய இருவரும் ஒக்ரோபெர் மாதத்திலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50), ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23) ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29) ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
0 Comments:
Post a Comment