மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களாக 108 கிராசேவகர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் முருகுப்பிள்ளை கோமளேஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக 108 கிராம சேவை உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் உள்ள நிலையில் மாவட்ட நிருவாகம் இயங்கி வருவதாக ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் முருகுப்பிள்ளை கோமளேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (07) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் கூறியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 343 கிராம சேவகர் கடமைப் பிரிவுகள் உள்ளன.
தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 235 கிராம சேவகர்கள் கடமையாற்றுகின்றனர்.
அதேவேளை கிராம சேவகர்கள் இல்லாத 108 கிராமங்களில் கடந்த 3 வருடகாலமாக பதில் கடமை மூலமே அந்தந்தக் கிராமப் பிரிவுகளுக்கான நிருவாக சேவைகள் இடம்பெறுகின்றன.
கிராம சேவை அலுவலர்கள் தமது நியமனம் மற்றும் வயது அடிப்படையில் ஒரு தொகுதியாக ஏக காலத்தில் நியமிக்கப்படுவதும் அதேபோல ஒரு தொகுதியாக ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் செல்வதுமே இத்தகைய அதிகளவான வெற்றிடங்கள் நிலவுவதற்குக் காரணமாகும்.
வருடாவருடம் கிராம அலுவலர்கள் கிரமமாக நியமனம் செய்யப்படுவார்களாயின் கிராமங்களில் கிராம சேவை அலுவலர்களுக்கான நிருவாக இடைவெளி ஏற்படாதிருக்கவும், அதேவேளை கிராம அலுவலர்கள் வேலைப்பளுவின்றி கடமையாற்றுவதற்கும் வாய்ப்புக் கிட்டும்.
கிரமமாக கிராம உத்தியோகத்தர்கள் நியமனங்கள் இடம்பெறும் வகையில் நிருவாக ஒழுங்குகள் இருக்குமாயின் இந்தளவு அதிக வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவுவதற்கு வாய்ப்பில்லை.
ஒரு தொகுதியினர் ஓய்வு பெற்றுச் செல்ல புதிதாக மற்றுமொரு தொகுதியினர் கடமைப் பொறுப்பில் இணைந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இலங்கை அரச நிருவாகச் சக்கரத்திலே ஆரம்பப் புள்ளியிலும் அதேவேளை மிக முக்கியமான அடிப்படையான நிருவாகக் கடமைக் கட்டமைப்பிலும் கிராம சேவகர்கள் உள்ளதால் அரச நிருவாக இயங்கியலுக்கு கிராம சேவகர்களின் கடமை இருப்பு முக்கியமானது.
தமக்கு குறித்தொதுக்கப்பட்ட கிராமங்களில் கடமை செய்வதோடு கிராம சேவகர்கள் இல்லாத கிராமங்களில் பதில் கடமை செய்வதற்குரிய மேலதிகக் கொடுப்பனவுகள் பதில் கடமை புரியும் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்ற போதிலும் அது தமது அர்ப்பணிப்பான சேவைக்குப் போதாது என கிராம சேவகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
0 Comments:
Post a Comment