மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தினால் உயர் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 08.10.2017 இடம்பெற்ற ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட மருத்துவம், பொறியியல், சட்டம், வர்த்தகம், முகாமைத்துவம், விவசாய விஞ்ஞானம், வர்த்தகமும் முகாமைத்துவமும், கலை, கலை கலாசாரம், உள்ளிட்ட 60 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்படி கிழக்குப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு தலா 15,000 ரூபாவும், ஏனைய 55 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாவும் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு உதயவன் இசைக்குழுவின் ஸ்தாபகர் ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் அருமத்துரைக்கு அவரது கலை, கலாசாரம், பஜனை மற்றும் இசைத்துறைக்கு ஆற்றிய சேவையைக் கௌரவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தினால் 'இசை ஞானச் சித்தன்” என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த ஆசிரியர் பூபாலபிள்ளை நித்தியானந்ததாசன் மற்றும் அரசடியைச் சேர்ந்த நவரட்ணம் புவனேஸ்வரன் ஆகியோருக்கு அகில இலங்கை சமாதான நீதவான் நியமனமும் பயனியர் விளையாட்;டுக் கழகத்திற்கு கிறிக்கட், வலைப்பந்து, பூப்பந்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இந்து, பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாகளான ஞானமுத்து ஸ்ரீநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பொன் செல்வராஜா, கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத் தலைவர் சிவம் பாக்கியநாதன் ஆகியோரும் பயனாளிகளான மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment