8 Oct 2017

தமிழ் மொழி மூலம் புத்தகங்கள் தயாரிக்கும் பொறுப்பு வடக்கு கிழக்கு மாகாண சபையிடம் கையளிக்கப்பட வேண்டும். கல்வியமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் எஸ். தில்லை நடராஜா

SHARE
தமிழ் மொழி மூலம் புத்தகங்களைத் தயாரிக்கும் பொறுப்பு வடக்கு கிழக்கு மாகாண சபையிடம் கையளிக்கப்பட வேண்டும் என கல்வியமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் எஸ். தில்லை நடராஜா தெரிவித்தார்.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவாமி விபுலாந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலைவிழாவும் இறுதி நாள் நிகழ்வு சனிக்கிழமை இரவு  07.10.2017 மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றபோது அவர் தலைமையுரை ஆற்றினார்.

நிகழ்வில்; கலந்து கொண்ட அவர் தொடர்ந்து பேசுகையில், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திலே சில காலம் நான் மாகாணக் கல்வியைமச்சின் பிரதிச் செயலாளராகப் பணியாற்றியிருக்கின்றேன். அதேவேளை மத்திய கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கின்றேன்.

தமிழ் மொழிப் பாடப் புத்தக வெளியீடுகள் சம்பந்தமாக சில திட்டங்களை வரைந்து அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டங்களைச் செய்கின்றபோது அரசாங்கம் மாறியதால் அவை பயனற்றுப் போயின.

தமிழ் மொழி மூலம் புத்தகங்கள் தயாரிக்கின்ற பொறுப்பை வடக்கு கிழக்கு மாகாண சபையிடம் கையளித்தால் அதில் தவறுகள், வழுக்கள் இடம்பெறாது என்பது எனது ஆய்வினடிப்படையில் தோன்றும் கருத்தாகும்.

ஏனென்றால் தமிழர்களாயினும் முஸ்லிம்களாயினும் வடக்கு கிழக்கில் தமிழறிஞர்கள் உள்ளார்கள்.  அங்கு கொடுக்கப்படும்போதுதான்  அவர்கள் அசிரத்தையில்லாமல் அர்ப்பணிப்போடு, உணர்வோடு ஒன்றிப்போய் இந்தப் பணியைச் செவ்வனே செய்வார்கள்.
நான் ஜேர்மனிக்குப் போயிருந்தபோது அங்குள்ள தமிழ்ப் பற்றாளர்கள் புத்தகங்களை அச்சிடக் கூடிய சில அச்சியந்திரங்களைக் கூட வழங்க ஆயத்தமாக இருந்தார்கள்.

இங்கிருந்து இடம்பெயர்ந்த புலம்பெயர் உறவுகள் இங்குள்ள மாணவர்கள் கற்பதற்கு பல வசதி வாய்ப்புகளைக் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.
நாட்டிலுள்ள நமக்கு புலம்பெயர்ந்தவர்களது பங்களிப்பு கணிசமானளவு இருக்கின்றது.

அவர்களின் ஒத்துழைப்புடன் புதிய பாடப்புத்தகங்களை எங்களைச் சேர்ந்தவர்களே தயாரித்தால் அதில் எந்த வழுக்களும் வருவதற்கு இடமிருக்காது.

இப்பொழுது நமக்குச் சாதகமான காற்று வீச ஆரம்பத்திருக்கின்றது.
எங்களுக்குரிய பாடப்புத்தகங்களை நாங்களே தயாரிப்பதற்குரிய அரசாங்கம் அனுமதித்தால் எங்களிலுள்ள அனுபவம் வாய்ந்த, அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய பல பேராசிரியர்கள் கலாநிதிகள் இப்படி எல்லோர் முயற்சியும் ஒன்று சேர்ந்தால் அவை நிச்சயமாக நாளைய சமூகத்திற்கு நல்ல புத்தகங்களாக மலரும்” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: