23 Oct 2017

காட்டு யானைகளின் துவம்சத்தால் விவசாயிகள் சோளச் செய்கையை மட்டுப்படுத்தி நிலக்கடலைக்கு மாறியிருப்பது அதிக இலாபமளிக்கிறது விவசாயத் திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர் நல்லதம்பி கணேசமூர்த்தி

SHARE
வழமையாக அதிகளவு சோளச் செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளும் காட்டு யானைகளின் துவம்சத்தால் சோளச் செய்கையை மட்டுப்படுத்தி நிலக்கடலைக்கு மாறியிருப்பது அதிக இலாபமளிக்கும் உற்பத்தியாக மாறியிருக்கின்றது என மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் மறுவயற் பயிர் பிரிவுக்குப் பொறுப்பான பாடவிதான உத்தியோகத்தர் நல்லதம்பி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இதுபற்றி திங்கட்கிழமை 23.10.2017 மேலும் விவரம் தெரிவித்த அவர்@
அறுவடைக்குத் தயாராக இருக்கும் சோளச் செய்கையை உண்பதில் காட்டு யானைகள் ஆர்வம் காட்டுகின்றன.

இதனால் விவசாயிகள் அதிக இழப்புக்களையும் மனச் சோர்வையும் சந்திக்க வேண்டியிருந்தது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 500 ஹெக்ரேயரில்தான் நிலக்கடலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது சுமார் 800 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நிலக்கடலைச் செய்கையை மேற்கொள்ள ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள்  சோளச் செய்கையைக் கைவிட்டு நிலக்கடலைச் செய்கைக்கு மாறியிருப்பது அவர்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டக் கூடியதாகவுள்ளது.
நிலக்கடலைச் செய்கை மூலம் ஒரு ஏக்கரில் சுமார் 96 ஆயிரம் ரூபாவை விவசாயிகள் நிகர இலாலபமாக பெறக் கூடியதாகவிருக்கிறது.
ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலைக்காக ஏற்படும் மொத்த உற்பத்திச் செலவு சுமார் 64 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

விளைந்த நிலக்கடலைச் செடிகளை நிலத்திலிருந்து பிடுங்கும் இயந்திரம், நிலக்கடலை விதைகளை செடிகளிலிருந்து அகற்றும் இயந்திரம் உட்பட  நிலக்கடலை உற்பத்திக்கான சகல இயந்திராதிகளும் விவசாயிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

மாவட்டத்தில் 6 இயந்திரங்கள் விவசாயிகளுக்காக அவர்களது விவசாய அமைப்புக்களுக்கு பொதுவில் வழங்கப்பட்டுள்ளன.

அந்த இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 2 தொடக்கம் 4 ஏக்கரில் நிலக்கடலை அறுவடையைச் செய்ய முடியும்.

முன்னரென்றால் ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த நிலக்கடலையை செடிகளிலிருந்து பிரித்தெடுப்பதற்கு சுமார் 15 தொழிலாளர்கள் தேவையாகவிருந்தது.

இப்பொழுது தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தினூடாக வழங்கியுள்ள இந்த இயந்திரங்களைக் கொண்டு காய்ந்த நிலக்கடலையை செடிகளிலிருந்து இலகுவாக அகற்ற முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தப் பெரும்போகத்தில் விதை நிலக்கடலையை உற்பத்தி செய்யும் நோக்கில் 1940 கிலோ விதை நிலக்கடலை வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைக் கொண்டு 50 ஏக்கரில் நிலக்கடலையைப் பயிரிட்டு ஏக்கருக்கு 800 கிலோ விளைச்சல் என்ற எதிர்பார்ப்புடன் சுமார் 40 ஆயிரம் கிலோ அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதை நிலக்கடலையை உற்பத்தி செய்ய முடியும்.
இதைத் தவிர நுகர்வுக்கான நிலக்கடலை உற்பத்திக்கென  5400 கிலோ விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

50 வீதம் விவசாயிகளின் பங்களிப்புடன் இவற்றை நாம் விவசாயிகளுக்கு வழங்குகின்றோம்.

தற்போது உள்ளுர் விவசாயிகள் மறுவயற் பயிர் உற்பத்திக்காக ஊக்குவிக்கப்படுவதால் மறுவயற் பயிர் விதைகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் தட்டுப்பாடு எதிர்காலத்தில் முழுமையாக நீங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவளையாறு, மாவடியோடை, புத்தம்புரி, மாலையர்கட்டு, கதிரவெளி, கிரான், குடும்பிமலை, புலிபாய்ந்தகல் உள்ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகின்றது.


SHARE

Author: verified_user

0 Comments: