23 Oct 2017

இயந்திரம் மூலம் நெல் நாற்று நட்டு வேளாண்மை செய்தால் அதிக இலாபம் பெறலாம் - விவசாய உதவிப் பணிப்பாளர்

SHARE
இரசாயனப் பசளைகளுடன் சோதனைப் பசளைகளையும், வேளாண்மைச் செய்கைக்கு இடுவதன் மூலம் உச்ச விளைச்சலைப் பெறலாம். என்ற விடையத்தை விழிப்புணர்வு மூலமாக அதிகம் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும், வெல்லாவெளிப் பிரதேச விவசாயிகள் நிரூபித்துள்ளார்கள். மேலும் வேளாண்மைச் செய்கையில் நவீன தொழில் நுட்பமும் அதற்குரிய பசளைப் பிரயோகத்தையும், சிறந்த முறையில் பயன்படுத்தப் படுகின்றமை வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும்.
என மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்

வினைத்திறனுடனான பசளைப் பாவனை, நோய் பீடை முகாமைத்துவம், விளைச்சலை அதிகரித்தல், ஆகிய நோக்கத்திற்காக மட்டக்களப்பு செல்வாபுரம் கிராமத்தில் 14 ஏக்கரில் இயந்திரம் மூலம் நெல் நாற்று நட்டும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (22) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு விவசாயிகள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் தெரிவிக்கையில்…

இதற்காக வேண்டித்தான் முன்னணி விவசாயிகளை நாம் தெரிவு செய்து புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றோம் இம்முறை 14 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடுகை செய்தால் அடுத்து வரும் சிறுபோகத்தில் அது 10 வீத்திற்கு அதிகரிக்கப்படல் வேண்டும் அவ்வாறு செய்தால் விவசாயிகளின் வளர்ச்சியும், வருமானமும் மென்மேலும் அதிகரிக்கும். இயந்திரம் மூலம் நடப்பட்ட வயலில் அறுவடை விழா வைக்கும்போது சாதாரண விதைப்புக்கும், இயந்திரம் மூலம் நாற்று நட்டுவதற்கும் இடையில் ஏற்பட்ட விளைச்சலின் அதிகரிப்பு வீதம் தெரியவரும். சாதாரணமான முறையில் ஒரு ஏக்கரில் வேளாண்மை செய்தால்    28100 ரூபா வருமானம் கிடைக்கும், இயந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் நாற்று நட்டு வேளாண்மை செய்தால் ஒரு ஏக்கரில்  83300 ரூபா வருமானம் கிடைக்கும். 

எனவே எதிர்வரும் சிறுபோகத்தில் இயந்திரம் மூலம் நாற்று நட்டு வேளாண்மை செய்கையில் ஈடுபட முன்வரும் அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஏக்கருக்கு அரைவாசி மானிய அடிப்படையில் விதைநெல் வழங்கப்படும். இது சாதாரண முறையில் நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

இயந்திரம் மூலம் நெல்நாற்று நட்டு வேளாண்மை செய்கையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் நஞ்சற்ற நட்டைக் கட்டியெழுப்பலாம். இதில் பயிரின் செறிவு, நோய்த்தாக்கங்கள் இன்மை, களைக்ளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பலவற்றிற்குரிய செலவுகளும் மிகக்குறைவாகத்தான் தேவைப்படுகின்றன. எனவே விவசாயிகள் யாராயிருப்பினும் தங்களுக்குத் தேவையான தொழில் நுட்ப உதவிகள் தேவைப்படின் எமது விவசாய விரிவாக்கல் உத்தியோகஸ்த்தரை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் எஸ்.சசிகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு தெற்கு உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம், பெரும்பாக உத்தியோகஸ்த்தர் கே.உதயகுமார் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: