மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் கிரான் ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விரும்பத் தகாத அசம்பாவித சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு இயல்பு நிலையும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (30.10.2017) வழமைபோன்று இயல்பு நிலையும், வர்த்தக, தொழில், அலுவலக மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் சீராகி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் ஆகிய பிரதேசங்களிலும் கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குடா, பாசிக்குடா பிரதேசங்களிலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான், முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலும் பொலிஸ் ரோந்து, பாதுகாப்பு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இன முறுகலைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கிரான் வராந்த சந்தையிலும் வியாபாரம் செய்வது தொடர்பாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இவ்விரு சம்பவங்களிலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஒரு சில மணித்தியாலங்கள் ஏற்பட்டிருந்த பதற்றம் சுமுக நிலைக்குக் கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை, கல்குடா மற்றும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன வன்முறைகளைத் தூண்டி விடும் விசம சக்திகளின் அல்லது நபர்களின் செயற்பாடுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (27.10.2017) வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்ட இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதனால் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் கிரான் வாராந்தை சந்தை வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை (29.10.2017) கூடியபோது முஸ்லிம்கள் உட்பட மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வியாபாரிகள் தமது பொருட்களை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர்.
அவ்வேளையில் சிலர் ஒன்று கூடி கிரான் பிள்ளையார் கோவிலின் ஒலி பெருக்கி ஊடாக கிரான் சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது என தெரிவித்து அனைத்து முஸ்லிம் வியாபாரிகளும் 30 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்;பட்டது.
இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை எற்பட்டது.
பதற்ற சூழ்நிலை ஏற்பட்டு ஒரு சில மணி நேரத்தில் முஸ்லிம் வியாபாரிகள் தங்களது பொருட்களுடன் வெளியேறியுள்ளர். பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் சுமுக நிலை வழமைக்குத் திரும்பியிருந்தது.
0 Comments:
Post a Comment