17 Oct 2017

மட்டக்களப்பு சட்ட உதவி ஆணைக்குழுவினால் 928 இலவச சட்ட உதவி ஆலோசனைகளும் 228 இலவச வழக்குகளும் கையாளப்பட்டுள்ளன. சட்ட உதவி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி மிருதினி சிறிஸ்குமார்

SHARE
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் இவ்வாண்டின் கடந்த 9 மாத காலப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த 928 பேருக்கு இலவச சட்ட உதவி ஆலோசனைகளும் 228 பேரினது பிரச்சினைகளுக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இலவசமாக தீர்வும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகப் பொறுப்பதிகாரியும் சட்ட ஆலோசகருமான மிருதினி சிறிஸ்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை விவரம் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது@ மாதாந்த குடும்ப வருமானம் 25 ஆயிரம் ரூபாவுக்கு உட்பட்ட குடும்பங்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவை நாடலாம்.

அவ்வாறானவர்கள் சட்ட உதவி ஆணைக்குழுவின் இலவச சட்ட ஆலோசனைகளைப் பெறுவதோடு அவர்களுக்காக இலவசமாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு எமது சட்டத்தரணிகள் வழக்குத் தவணைகளுக்கு வழக்காளிகள் சார்பாக ஆஜராவர்கள்.

“இலவச சேவை நாடிகள்” தமது மாதாந்த குடும்ப வருமானம் 25 ஆயிரம் ரூபாவுக்கு உட்பட்டது என்பதை கிராம சேவையாளர் மூலமாக உறுதிப்படுத்திக் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனடிப்படையில் கணவன் கைவிட்டுச் செல்லுதல். குடும்ப வன்முறை, பல்வேறு காரணங்களால் தொடர்ந்தும் தம்பதிகள் இணைந்து வாழ முடியாமல் விவாகரத்தை நாடுதல், தாபரிப்பு, சித்திரவதை இம்சை தாங்க முடியவில்லை, வீட்டை விட்டு விலக்கி வைக்க வேண்டும் என்றவாறான பலவகை குடும்பப் பிணக்குகளுக்கு எமது சட்ட உதவி ஆணைக்குழுவினால் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு அதற்கும் மேலதிகமாக இலவசமாக வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.
இவ்வாண்டின் 9 மாத காலப்பகுதியில் எம்மால் இலவசமாகத் தாக்கல் செய்யப்பட்டு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்ட 228 வழக்குகளில் 190 தாபரிப்பு வழக்குகளும், 14 விவாகரத்து வழக்குகளும், 13 பணக் கொடுக்கல் வாங்கல் தகராறுகளும், 08 பல்வகை விசேஷட பிரச்சினைகளும் 03 காணிப் பிணக்கு வழக்குகளும் உள்ளடங்குகின்றன.

அதேவேளை கடந்த ஆண்டு 256 வழக்குகள் எம்மால் இலவசமாகக் கையாளப்பட்டு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள ஆண் பெண் இருபாலாருக்கும் எமது உதவிகள் உண்டு.
காணிப் பிணக்குகள், அடாத்தாகக் கைப்பற்றல், பணக் கொடுக்கல் வாங்கல்களில் மோசடிகள், திருமணச் சான்றிதழில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் இவ்வாறு எமது இலவச ஆலோசனைகள் பரந்துபட்டவை.

கிராம மக்களில் கூடுதலானோருக்கு எமது இலவச சட்ட உதவி ஆலோசனைச் சேவைகள் பற்றித் தெரியாமலுள்ளது.

ஏழை மக்கள் தமக்கு சட்ட உதவி நிவாரணம் பெற வழி தெரியாமல் பிரச்சினைகளுடனே மனம் வெதும்பி வாழ்கின்ற நிலைமையும் உண்டு,
அதேவேளை எவ்வாறேனும் கடன்பட்டாயினும் அதிக செலவில் சட்டத்தரணிகளைப் பெறுகின்ற நிலைமையும் உண்டு.

வறிய மக்கள் மத்தியில் இது பற்றி விழிப்புணர்வூட்டப்படாலும் அதனை அக்கறையோடு பெற்றுக் கொள்வதற்கு முன்வராத நிலைமை சகலருக்கும் நீதி நியாயத்தைப் பெற்றுக் கொடுத்தல் என்ற எமது உன்னத சேவைக்குத் தடையாய் அமைந்துள்ளன.

அதேவேளை தாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது மாத்திரம் அவஸ்தைப்படுகின்ற நிலைமையும் வறிய மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இதனால் வறிய மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் அதிகம். கிராம மக்களின் காலடிக்குச் சென்று அவர்களுக்கு சட்டம், இலவச சட்ட ஆலோசனைகள் பற்றி விழிப்புணர்வூட்டுவதில் நாம் என்றும் அக்கறையாக உள்ளோம்.
விசேடமாக பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், வறிய மக்கள் மத்தியிலும் சட்டப்; பாதுகாப்பு, உரிமைகள் பற்றியும் விழிப்புணர்வை ஊட்டி வருகின்றோம்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: