(கிருஷ்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் நல்லாட்சியில் பல ஆரோக்கியமான அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், 163 உலக நாடுகள் மத்தியில் இலங்கை 80 ஆவது இடத்தை அடைந்துள்ளது. கடந்த வருடத்தோடு ஒப்பிடப்படுமிடத்து இலங்கை 17 நிலைகளால் முன்னேற்றம் கண்டுள்ளது.
இருந்தபோதிலும் நல்லிணக்கத்தை பூரணமாக ஏற்படுத்துவதற்கு இதற்கு நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது. இருந்தபோதும் யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த போதிலும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வித அரசியல் சுயாட்சி மற்றும் பொருளாதார உதவிகள் மற்றும் நீதி போன்றன மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் இன்னமும் பத்து ஆண்டுகளில் மீண்டுமொரு யுத்தம் தொடங்கும் என அரசியல் ஆர்வலர்கள் எதிர்வுகூறுகிறார்கள்!
சகல இனங்களின் உரிமைகளையும் பாதுகாக்கவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.தவறு செய்யும் எவரையும் தப்பிக்க இடமளிக்க கூடாது. நல்லிணக்கத்தை உருவாக்குவது கடினமான ஒரு காரியம் அல்ல. ஆனால் அதை உருவாக்குவது அரசியல் தலைமைகளின் கைகளில் மாத்திரமே உள்ளது.
யுத்த மீறல்கள் பொறுப்பெற்பதன் மூலமும் நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலமும் நட்டினை சமாதானத்தினை நோக்கி நகர்த்த முடியும். இதற்கான ஓர் வாய்ப்பினை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஏற்படுத்தியிருக்கின்றது என்பதனையும் மறுப்பதற்கில்லை.
தற்போதைய சமாதான முன்னெடுப்புகளில் முக்கிய பிரச்சினையாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்ற பிரச்சினையே முதன்மை பெறுகின்றது. நல்லிணக்க ஆணைக்குழு மீள் குடியேற்றம் பற்றி சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்திருப்பினும் அவை தற்போதைய அரசாங்கத்தினால் முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமது செந்த இடங்களுக்கு சென்று தமது வாழ்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவர்களது வாழ்கை நகருகின்றது. இருப்பினும் இராணுவ நலனுக்காக காணி சுவீகரிப்பு வடகிழக்கில் தொடர்வதனால் சமாதான முன்னெடுப்பில் இப்பிரச்சினை பாரிய தாக்கத்தினை கொடுக்கின்றது எனலாம்.
யுத்தம் முடிந்ததன் பின்னர் வடக்கில் நிலவும் பாரதூரமான பிரச்சினைகளில் ஒன்றான யுத்தத்தால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அழுத்தங்களுக்கு உள்ளானவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதாகும். யுத்தம் காரணமாக காணமால் போனவர்களை பற்றிய தகவல்களை வெளியிடாத பிரச்சினை, யுத்தம் இடம்பெற்ற காலம் முழுவதிலும் பட்ட துன்பங்கள் காரணமாக உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாமை தற்போதைய சமாதான முன்னெடுப்புக்களில் முக்கிய பிரச்சினையாகும்.
இவ்வாறு உளரீதியாக பாதிக்கப்பட்ட ஆண்டான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கருத்து தெரிவிக்கையில். “30 ஆண்டுகளாக போர் என்ற பெயரில் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள் இப்போதுதான் நிம்மதியாக வாழத்துவங்கியுள்ளோம். எங்கள் தமிழர்கள் சுதந்திரமாக பயமற்று வாழ அரசியல் தீர்வுக்கு அரசாங்கம் உதவவேண்டும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் மனோநிலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமானதாக காணப்படுகின்றது. யுத்த இழப்புகளுக்கு பிறகும் தமிழ் ஈழம் கோரிக்கையை கையை நாங்கள் கைவிட்டுவிட்டோம். இன்றைய நிலையில் தமிழ் ஈழம் சாத்தியமில்லாதது. இப்போது அதில் திருப்தியடைந்து அதில் நிம்மதியாக வாழ்கிறார்கள். இப்போது பலர்; அதையேதான் விரும்புகிறோம். சிங்கள அரசியல் தலைவர்கள் அரசியலுக்காக பல தவறுகளை செய்யலாம். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள். யாழ்ப்பாணத்தில் இறுதிப்போர் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. யுத்தத்தில் பிழைத்து இப்போதும் உயிரோடு இருக்கும் நாங்கள் எங்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு பிழையான கருத்து. வடக்கு-கிழக்கில் 90 ஆயிரம் விதவைகள் இங்கு இருக்கிறார்கள். இவர்களின் பிள்ளைகளை வளர்த்தெடுக்க மறுவாழ்வுத்திட்டம், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளும், வீடுகள் நிலத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் அதே நிலத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தல், தொழிலை இழந்தவர்களுக்கு அதற்கான இழப்பீடுகள் ஆகியவைகள் தான் எங்களின் அவசர தேவைகள் ஆகும்” (மேற்படி உளரீதியாக பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் கருத்து மெமரிமெப் க்கு வழங்கப்பட்டதாகும்)
“காணாமற் போனோர் என்பது தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள அதேவேளையில், இவர்கள் பொருளாதார ரீதியிலும் பல சவால்களைச் சந்தித்து வருகின்றனர். சிங்கள பேரினவாத இராணுவம் தற்போதும் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள், விடுதிகள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றது. அத்துடன் போரின் போது இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. தமது வாழ்வாதாரத் தொழில்களை சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது மேற்கொள்வதால் தமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெருமளவான தமிழ் மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்” என முல்லைத்தீவைச் சேர்ந்து சரஸ்வதி (54) தெரிவித்தார்;.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: “இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தற்போது வேறு பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். போரின் போது கணவன்மார்களை இழந்த பெண்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய சலுகைகளைப் பெறமுடியாத நிலையில் வாழ்வதாகவும் இவர்கள் தொழிலிடங்களில் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாவதாகவும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த போதிலும் எவ்வித அரசியல் சுயாட்சி மற்றும் பொருளாதார உதவிகள் மற்றும் நீதி போன்றன மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் இன்னமும் பத்து ஆண்டுகளில் மீண்டுமொரு யுத்தம் தொடங்கும் என அரசியல் ஆர்வலர்கள் எதிர்வுகூறுகிறார்கள்” என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து வாக்குறுதிகளையும் சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர், சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதுடன் இவர்களால் நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டது. ஆகவே இதனைச் செயற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும், ஆனால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் பல்வேறு யுத்த மீறல்களில் ஈடுபட்டதால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிங்கள சமூகம் எதிர்ப்பைக் காண்பித்து வருவதாகவும் இது நல்லிணக்கத்திற்கு இடையூறாக உள்ளதாகவும் சிறிலங்காவின் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.
‘இது ஒரு ஜனநாயக அரசாங்கமாகும். ஆகவே மக்கள் ஏற்றுக்கொள்வதை மட்டுமே இவர்களால் செய்ய முடியும். போரால் பாதிக்கப்பட்ட கம்போடியா, பங்களாதேஸ் மற்றும் ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகள் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் படி, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்’ என பெரேரா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் சொந்த நிலங்களைப் பெறுவதற்கும், பொருளாதார வாய்ப்புக்களைப் பெறுவதற்கும், காணாமற்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்குமான உதவிகள் தற்போது வழங்கப்பட வேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி போன்றன சற்றுத் தாமதமாகலாம் எனவும் இனப்பாகுபாடுகள் கடந்து, போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை சிங்களவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
நிலையான சமாதானம், முன்னேற்றம், ஒவ்வொருநபரினதும் மரியாதையை உறுதிப்படுத்தல், பன்முகத்தன்மையை மதித்தல் உட்பட சம குடியுரிமையின் உரிமைகளான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்குதல் ஆகியவற்றை கட்டியெழுப்ப அனைத்து மக்களும் தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும்.
0 Comments:
Post a Comment