5 Sept 2017

செப்ரெம்பெர் முதல் வீட்டுக்கு வீடு இடைவிடாத போராட்டம். இனவாதத்தை தூண்ட கிழக்குப் பல்கலை நிருவாகம் முயற்சிப்பதாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டு

SHARE
தமிழ் முஸ்லிம் சிங்களம் என ஒட்டு மொத்த மாணவர்களின் நலன்களை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்
அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுக்காக தாம் போராடி வரும்போது அதனைக் கண்டு கொள்ளாத கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம் தமது போராட்டத்திற்கு இனவாத முத்திரை குத்துவது கீழ்த்தரமான செயல் என போராட்டம் நடத்தி வரும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது விடயமாக ஞாயிற்றுக்கிழமை 03.09.2017 அறிக்கை வெளியிட்டுள்ள மாணவர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, இன பேதம் இல்லாத நாம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் இனிமேல் கற்க வரப்போகும் தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்களின் உரிமைக்காகவே பல்வேறு தடைகள் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டபோதும் இரவு பகலாகப் போராடி வருகின்றோம்.

ஆயினும். எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக இனவாதத்தைத் தூண்டி மாணவர்களைப் பிரித்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம் கீழ்த்தரமாகச் செயற்படுகின்றது.

இதன் உண்மை நிலையை பிரதேச மக்களும் சகோதரத்துவ சமூகங்களும் அறிந்து கொள்வதற்காக நாம் செப்ரெம்பெர் மாதம் முழுவதும் “வீட்டுக்கு வீடு இடைவிடாத விளக்கமளிக்கும்”போராட்டத்தைத் துவங்கியுள்ளோம்.

எமது நியாயமான போராட்டம் ஆரம்பித்து தற்போது மூன்று மாதங்களை நிறைவு செய்துள்ளபோதும் அதுபற்றி அக்கறை எடுக்காத பல்கலைக்கழக நிருவாகம் அதனை மூடி மறைக்க முயற்சிக்கின்றது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான கால அளவுக்குள் நிறைவு செய், நான்கு வருடங்களில் நிறைவு செய்யவேண்டிய  பட்டப்படிப்பு ஆறு வருடங்களில் நிறைவடைவதால் இரண்டு ஆண்டுகள் மேலதிகமாக வீணாக கால இழுத்தடிப்பு இடம்பெறுகிறது.

உரிய நேரத்தில் பரீட்சைகள் நடைபெற்று பெறுபேறுகளை வெளியிடுவதன் மூலம் நான்கு வருடங்களில் பட்டப்படிப்பினை மாணவர்கள் பூர்த்தி செய்ய முடியும்.

மஹாபொல புலமைப் பரிசில் பிரச்சினையை உடனே நிவர்த்தி செய், விடுதிப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய், அசாதாரணமான வகுப்புத் தடையை நீக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கமெராக்களை உடனடியாக அகற்று,  என்பன உள்ளிட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு தற்போது அப்பல்கலைக்கழக நிருவாகக் கட்டிடத்தையும் கடந்த ஒரு மாதகாலமாக ஆக்கிரமித்துள்ளனர்.

இவை ஒரு இனத்துக்கான உரிமைப் போராட்டமல்ல.” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆக்கிரமிப்;புப் போராட்டத்தின் விளைவாக பல்கலைக்கழகத்தில் மின்சார ஒளியும், நீர் விநியோகமும் தடைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் வேறு வழியில் கிணறுகளில் இருந்து கைகளினால் நீரைப் பெறுவதோடு மின் பிறப்பாக்கி மூலம் இரவில் வெளிச்சத்தைப் பெறுகின்றனர்.
பல்கலைக்கழகத்தை தினமும் மாணவர்களே கூட்டித் துடைத்து துப்புரவு செய்து வருவதோடு அங்கள்ள விலங்குகளையும் பராமரித்து வருகின்றனர்.
தமது போராட்டத்துக்கான சில்லறை உதவு தொகையையும் மாணவர்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்று வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: