தவறாளர்களாக அடையாளம் காணப்பட்டு சீர்திருத்தப்ணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் எவரும் மீளவும் தவறிழைக்கவில்லை இது சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பணிகளில் கிடைக்கும் பாரிய வெற்றியாகும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணி மேற்பார்வையாளர் எஸ். ஜரோனிக்கா தெரிவித்தார்.
தவறாளர்களாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்ட பெண்கள் சமுதாயஞ்சார் சீவர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறித்து அவர் வியாழக்கிழமை 07.09.2017 விவரங்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கூறிய அவர்@ கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 பெண்கள் சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தவறாளர்களாக இனங்காணப்பட்டிருந்தார்கள்.
இப்பெண்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் குடும்பங்களோடு சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
பெண்கள் தவறாளர்களாக மாறுவதற்கு குடும்ப சூழ்நிலையே காரணமாய் அமைந்து விடுகின்றது.
சட்டவிரோத சாராய விற்பனையில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றார்கள் என்பதே சரியானது.
குடும்ப ஆண்களால் குறிப்பாக தமது கணவன்மாரால் தூண்டப்படுவதே பிரதான காரணம்.
தவறாளர்களான பெண்களைச் சீர்திருத்தம் செய்து சுயதொழிலுக்கு வழிகாட்டினால் அதனைக் கொண்டு அவர்கள் குற்றச் செயல்களிலிருந்து விடுபட வாய்ப்புண்டு.
வடிசாராயம் தயாரிப்பது பெண்களல்ல. அது வேறெங்கோ உற்பத்தி செய்யப்பட்டு பெண்களிடம் விற்பனைக்கு கையளிக்கப்படுகின்றது.
இந்தக் கள்ளச்சாராய விற்பனையில் கணவன் பிடிபட்டால் சிறைக்குச் செல்ல வேண்டும். பெண்கள் என்றால் எவ்வாறேனும் விடுபட்டு விடலாம் என்ற ஒரே காரணத்தினால் பெண்கள் விற்பனை செய்யப்படுவதற்குத் தூண்டப்படுகின்றார்கள்.
பயம் மற்றும் நெருக்கடி காரணமாக மனைவிமார் இதற்கு உடன்பட்டு விடுகின்றார்கள்.
வடி சாராயம் காய்ச்சும் விடயம் எல்லோரும் செய்வதில்லை என்ற விடயத்தை கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து அறிய முடிகின்றது.
வடிசாராயத்தை ஒரு இடத்தில் தயாரித்து பல இடங்களுக்கு விநியோகம் செய்கின்றார்கள். இதன்போது தூண்டப்பட்டு விற்குமாறு பணிக்கபப்டும் தொழிலாளியான பெண் கைது செய்யப்படுகின்றார்.
ஆனால், அதனை உற்பத்தி செய்யும் நபர்கள்; சிக்கிவிடுவதில்லை. செல்வாக்குள்ள அந்த நபர்கள் தங்களது உச்சபட்ச செல்வாக்குகளைப் பாவித்து தப்பி விடுகிறார்கள். இந்தப் பின்னணியிலேதான் பெண்கள் சிக்குகிறார்கள்.
செல்வாக்குள்ள வடிசாராய முதலாளிகளை கைது செய்து நீதிமன்றத் தண்டனைக்கு உட்படுத்தினால்தான் ஏதாவது சமூக மாற்றம் ஏற்படும்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் எவருக்கும் வடிசாராயம் காய்ச்சுவது எப்படியென்றே தெரியாது.
செல்வாக்குள்ள தரவழிகள் எவ்வளவு தண்டப்பணத்தையும் செலுத்தத் தயாராக இருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் சமூகம் பொலிஸாருக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
தவறாளர்களுக்கு உளநல ஆலோசனைகளுடன், ஆன்மீக நெறிகளும், வெளிப்படையான இடங்களில் நடைபெறும் பொதுத் தொண்டுகளும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. அது அவர்களுக்கு ஒரு பெரும் படிப்பினையாக மாறுகின்றது.
பலரும் பார்த்திருக்க பொது இடங்களில் தொண்டு செய்தாக வேண்டும் என்கின்ற அவமான அச்சத்தால் பெண்கள் மேற்கொண்டும் தவறு செய்ய மாட்டார்கள்.
சீர்திருத்தப் பணியில் ஈடுபட்ட பெண்கள் மீளவும் அதேகாரியத்திற்குப் போனதில்லை.
பின்தொடர் நடவடிக்கைகளின் மூலம் இதனை நாம் அவதானித்திருக்கின்றோம்.
அவர்களது பிள்ளைகளும் கூட இந்தகைய சமூக விரோதச் செயல்களைச் செய்ய அனுமதிக்கவில்லை என்பதையும் கணவன்மாருடன் முரண்பட்டது பற்றியும் அறியக் கிடைக்கின்றது.
நாம் மேற்கொண்டு வரும் சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணி தவறாளர்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்க பெருந்துணை புரிந்து வருகின்றது. இது மாபெரும் வெற்றியாகும்.
0 Comments:
Post a Comment