முஸ்லிம் சமூகத்திற்குள் குடிகொண்டுள்ள தற்காலத்திற்குப் பொருந்தாத ஏமாற்று அரசியல் இருக்கும் வரை இந்த சமூகம் விமோசனமடையப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
காத்தான்குடி இயற்கை பசளைத் தயாரிப்பு விஸ்தரி;ப்பு
நிலையத்தில் புதன்கிழமை 06.09.2017 இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்@ நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் மற்றும் தற்போது வரைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுப்போயுள்ள முஸ்லிம் சமூகம் தனது அரசியல் வழிமுறைகள் பற்றி மீளாய்வு செய்து கொள்ள வேண்டும்.
சமூகத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்தும் துரோகத்தனமான அரசியலை தமது முதலீடாகக் கொண்டிருக்கின்றார்கள்.
பித்தலாட்டம் செய்து தங்களது அரசியலைத் தக்க வைத்து மக்களைக் குழப்பத்திலாழ்த்தி பிழைப்பு நடாத்துவதை அவர்கள் கைவிட வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கும் ஒதுக்கீடுகளைக் கொண்டு கட்டிடங்களைக் கட்டிவிட்டு அதற்கு தங்களது பெயர்களை பொறிப்பதை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபை ஆட்சியினூடாக அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கும் பொதுக் கட்டிடங்களுக்கும் பொறித்துள்ள அவர்களது பெயர்களை அகற்ற நாம் நடவடிக்கை எடுப்போம்.
ஒரு அரசியல்வாதி தனது பெயரை பாடசாலைக்குச் சூட்டுவது எதிர்காலத்தில் அந்தப் பாடசாலையின் கல்விப் பின்னடைவுக்கே வழிவகுக்கும். காரணம் மாற்று அரசியல்வாதிகளின் பெயரிலுள்ள அந்தப் பாடசாலைக்கு மற்றொரு அரசியல்வாதி அபிவிருத்திக்கு நிதி ஒதுக்க முன்வராமாட்டார். இது யதார்த்தம்.
இதற்குத் தீர்வாக அரசியல்வாதிகளின் பெயர்களுக்குப் பதிலாக மனித குல மேம்பாட்டிற்காக உழைத்த அரசியலற்ற பெரியார்களின் பெயர்களைப் பொறிப்பதில் நமக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை.
அரசியல்வாதிகள் தமது பெயர் பொறிக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமது சொந்தப் பணத்தில் கட்டிடங்களை கட்டிவிட்டு அதற்குத் தாம் விரும்பியபடி பெயரிடுவதில் ஆட்சேபனை இல்லை.
மக்களின் வரிப்பணத்தில் அரசியல்வாதிகளின் பெயர் துலங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
இங்கே நாம் நாற்றக் கழிவுகளை அகற்றி மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாலழ்வளிக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது மியான்மர் நாட்டில் மனிதர்களையே கொன்றொழித்து அரசியல் நடாத்தும் மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய கேவலமான அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த விடயத்தில் ஐநாவும் அயல்நாடுகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தாங்கள் கையாலாகாதவர்களாக இருப்பது குறித்து வெட்கப்பட வேண்டும். இது ஒட்டு மொத்த மனித குலத்துக்கே தலைக்குனிவு என்றார்.
0 Comments:
Post a Comment