கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 1990ஆம் ஆண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நினைவை எதிர்வரும் காலங்களில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நிறைவேற்ற வேண்டும். உலகத் தமிழ் மாணவர் அமைப்பின் வன்னிப் பிராந்திய இணைப்பாளர் எஸ்.ரி.பிரணவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் 27வது நினைவு நிகழ்வு செவ்வாய்க்கிழமை 05.09.2017 ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரணவன்@
கிழக்குப் பல்கலைக் கழகத்திலே சிங்கள அரசும் கைக்கூலிகளும் இணைந்து கூட்டிச் சென்ற உறவுகளைத் தொலைத்து இப்பொழுது 27 வருடங்கள் கழிந்துவிட்டபோதிலும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
இதனை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
இந்த மக்கள் தொடர்ந்தும் இந்த மண்ணிலே வாழ்வதற்கு மாணவர் சமுதாயம் வினைத்திறன் கொண்ட சக்திகளாக மாற வேண்டும்.
தமிழனப்படுபெகாலை, மற்றும் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு ஜனநாயக நல்லாட்சி அரசாங்கம் பதில் கூற வேண்டும்.
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நினைவு அனுஷ்டிப்பை எதிர்வரும் காலங்களில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நிறைவேற்ற வேண்டும்.
இப்படிச் செய்வதற்கு மக்கள் சமுதாயம், கல்விச் சமூகம் என்பவற்றுக்கு உலகத் தமிழ் மாணவர் அமைப்பினராகிய நாங்கள் பூரண உதவி ஒத்தாசைகளை வழங்குவோம் என்றார்.
1990ஆம் ஆண்டு செப்ரெம்பெர் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது அங்கு தஞ்சமடைந்திருந்தோரில் 158 ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் எவரும் வீடு திரும்பியிருக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment