தற்காலச் சமூகச் சிறார்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல் தொடர்பாக மிகுந்த கவனம் எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சகல மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒக்ரோபர் 01ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற உலக சிறுவர் தின வேலைத் திட்டத்தில் சிறுவர்கள் பற்றி அதீத கவனம் ஈர்க்கப்பட வேண்டும்.
இங்கு மகிழ்வான சிறுவர் உலகைத் தோற்றுவிப்பதற்காக மூத்தோரின் அன்பு, ஒத்துழைப்பு மற்றும் தற்காலச் சமூகச் சிறார்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல் தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மூத்தோரின் விசேட கவனத்தை ஈர்க்கும் முகமாக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வருட உலக சிறுவர் தினத்தின் “தாய் தந்தை முதியோரின் அன்பு, பாசப் பிணைப்பினூடாகச் சிறுவர்களை அவர்களது அதிசயம் மிக்க உலகிற்குக் கொண்டு செல்வோம்”; எனும் தொனிப்பொருள் அடங்கிய பதாகையை (டீயnநெச) பாடசாலையின் முன்னால் காட்சிப்படுத்துதல், சிறார்களின் பாதுகாப்பைக் காப்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மூத்தோர்களினது வகைகூறல் தொடர்பாகப் பொருத்தமான வளவாளர்கள் ஊடாகப் பாடசாலை மட்டத்தில் அறிவூட்டம் செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்,
தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளைக் குறைத்துக் கொள்ளுவதற்குத் தேவையான தேர்ச்சி விருத்தி வேலைத்திட்டங்களைப் பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்துதல், இவ்வருடத்தின் உலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருளுக்கமைவான தலைப்புக்களைத் தெரிந்து மாணவர்களின் ஆக்கத் திறன் மற்றும் அழகியற் திறன்களை மேம்படுத்தும் விதமாக குறுநாடகம், பாடல், வாத்திய இசை, நடன நிகழ்வு போன்றவற்றை முன்வைப்பதற்கு வழிப்படுத்தல், காலைக் கூட்டத்தில் இத்தொனிப் பொருளுக்கமைவான நிகழ்வுகளை நடாத்துதல், பாடசாலைச் சுவர் அறிவித்தல் பலகைகளில் இத்தொனிப் பொருளுக்கமைவான ஆக்கங்களைக் காட்சிப்படுத்துவதற்கு மாணவர்களை ஊக்குவித்தல்,
மேற்குறித்த விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, பயன்மிக்க வேலைத்திட்டங்களைச் சகல பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சு எதிர்பார்க்கின்றது என கல்வி அமைச்சுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment