கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் அல்குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 500 இற்கு மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் பரிசளித்துப் பாராட்டப்படவிருப்பதாக ஹாபிழ்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்ஹ் எம்.ரீ. அப்துல் காதர் (பலாஹி) தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விவரம் தரும் சந்திப்பு புதன்கிழமை 27.09.2017 இரவு ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை 30.09.2017 பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள அறபிக் கலாசாலைகள், அரபு மத்ரசாக்கள் மற்றும் பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிகளும் மார்க்கப் பெரியார்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஹாபிழ்களின் துன்ப துயரங்களைத் துடைத்து அவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் நோக்கில் இவ்வருடம் மார்ச் மாதம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் முழு முயற்சியின் பயனாக ஹாபிழ்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 2000 இற்கும் மேற்பட்ட ஹாபிழ்களை இந்த இமைப்பு தற்சமயம் அங்கத்தவர்களாக இணைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.
தேசிய ரீதியில் 60 வயதுக்கு மேற்பட்ட ஹாபிழ், ஹாபிழாக்களை (பெண்கள்) கௌரவித்து அவர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல், மாகாண மட்டத்தில் ஹாபிழ்களின் மாநாட்டை நடாத்துதல், ஹாபிழ்களின் விவரங்கள் அடங்கிய நூல் ஒன்றை வெளியிடல், அல்குர்ஆன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அது தொடர்பான ஆய்வு மையங்களை நிறுவுதல், தஜ்வீத் முறைப்படி அல்குர்ஆனை கற்பிக்கும் நிலையங்களை அமைத்தல், ஆங்கிலம், அரபு, சிங்கள மொழிகளில் சரளமாக பேசும் பயிற்சியை தொழில்நுட்பத்துடன் ஹாபிழ்களுக்கு வழங்குதல், ஹாபிழ்கள் உயர்கல்வியை மேற்கொள்ள உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நன்நோக்கங்களின் அடிப்படையில் இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டதாக அப்துல் காதர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment