கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பல்கலைக்கழகத்திலிருந்து அனைத்து பீட மாணவர்களும் வெள்ளிக்கிழமை நண்பகலுடன் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிற்பபிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல். ஜவ்பர் சாதிக் அறிவித்துள்ளார்.
இது விடயமாக வியாழக்கிழமை 17.08.2017 பதிவாளரால் பொது அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கவுன்சில், இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிலவும் தீர்க்கப்படாது தொடரும் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அதனைப் பரிசீலித்தற்கமைவாக 17ஆம் திகதி வியாழக்கிழமையிலிருந்து மறு அறிவித்தல் வரை இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை மற்றும் மட்டக்களப்பு வளாகங்களை மூடிவிட முடிவு செய்துள்ளது.
இதன் பிரகாரம் பல்கலைக்க கழகம் மீண்டும் திறக்கப்படும் வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்திற்கேற்ப பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட், 18 2017 நண்பகல் 12.00 மணியுடன் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறி விடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து விடுதி மாணவர்கள் தமது விடுதி அறைகளை விட்டு வெளியேறுவதோடு சாவிகளை அந்தந்த விடுதிக் காப்பாளர்கள், உப காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் மாணவர்கள் விடுதி அறைகளில் ஏதேனும் தங்களது சொந்தப் பொருட்களை விட்டுச் சென்றால் அதற்கு பல்கலைக் கழகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment