கிழக்கு மாகாணத்திலிருந்து வேலையில்லாப் பிரச்சினையைத் துடைத்தெறிவதும் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமையை ஒழிப்பதையும் இலக்காகக் கொண்டுதான் நாம் செயற்பட்டு வருகின்றோம். இவ்விரண்டு இலக்குகளுக்கும் பிரதமரும் ஜனாதிபதியும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தின் போது 55 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நகிழ்வில் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது.
ஏறாவூரில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகர சபைக் கட்டிடத்தை பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் சேர்ந்து திறந்து வைத்த பின்னர் முதலைமச்சர் உரையாற்றினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்@ எமது கிழக்கு மாகாண நல்லாட்சியிலே வேலையில்லாப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக நான் ஆரம்பபம் முதற்கொண்டு குரலெழுப்பி வந்துள்ளேன்.
அதன் பயனாக பட்டதாரிகள் 1700 பேருக்கு ஒரேயடியாக நியமனங்களை வழங்க முடிந்திருக்கிறது. மேலும் அதுபோன்று சிற்றூழியர் நியமனங்களையும் வழங்கியுள்ளோம். இன்னும் பாரிய தொழிற்பேட்டைகளை அமைத்து அதன் மூலமும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கியுள்ளோம்.
அதுபோல இன்னும் கிழக்கு மாகாணத்தில் பரந்து கிடக்கும் பல வளங்களையும் பயன்படுத்தி மனித வளத்தையும் சேர்த்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வறுமையை ஒழிப்பதற்குத் திட்டங்களை வகுத்துள்ளோம்.
மட்டக்களப்பை வறுமை மாவட்டம் என்ற பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும்.
கிழக்கிலுள்ள 1180 பாடசாலைகளில் சிற்றூழியர்கள் இல்லாததால் பல்வேறு சிரமங்கள் பாடசாலை நிருவாகம் எதிர்நோக்குகின்றது.
ஆகவே இந்த விடயத்தில் பிரதம மந்திரி அவர்கள் கருணை கூர்ந்து சிற்றூழியர்களை நியமிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
பிரதம மந்திரியின் முழுமனதுடனான சமாதான சௌபாக்கிய அபிவிருத்தி எனும் கொள்கையின் கீழ் அந்தத் திட்டங்கள் அமுல்படுத்தப்படும்பொழுது நமது இலக்கு வெற்றியடையும்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களின் பங்கு இன்றியமையாதது, அதற்கு விமான சேவைகள் கிழக்கு மாகாணத்தில் தினமும் இடம்பெற வேண்டும் என்பதையும் பிரதமரிடம் நான் அடிக்கடி முன்வைத்து வந்துள்ளேன்.
அதேபோல ஹபறணை நாற் சந்தியிலிருந்து மட்டக்களப்புக் கூடாக பொத்துவில் வரைக்கும், கந்தளாய் ஊடாக திருகோணமலை வரைக்கும் அதிவேக நெடுஞ்சாலை நிருமாணிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் முன் வைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இன ஒற்றுமை அரசை நாட்டுக்கு முன்னுதாரணமாக கிழக்கில் நடாத்தி வருகின்றோம்.
கிழக்கிலே சுகாதாரம், கல்வி, மற்றும் உட்கட்டமைப்பு வசதிவாய்ப்புக்களை மேம்படுத்திக் கொடுப்பதில் பிரதமர் அவர்கள் மத்திய அரசாங்கத்தினூடாக உதவியிருக்கின்றார்கள்.
13வது சரத்திலே வழங்கப்பட்டு காகிதத்திலே எழுதப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் மாகாண சபை சிறப்பாபகச் செயற்பட முடியும்.
நிதியளிப்புக்கள் மத்திய அரசிலிருந்து மாகாண சபைக்கு மிகக் குறைந்த அளவிலேயே விடுவிக்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment