மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு, மட்டக்களப்பு. திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை படையினர் விடுவிக்கும்வரை காணியை இழந்த முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளிக்கிழமை 04.08.2017 மாலையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.
நாவலடிச்சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாம் பகுதியில் இராணுவத்தினரால் கையக்கப்படுத்தப்பட்டிருக்கும் 8 ஏக்கர் தனியார் காணியை விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும்.
இங்கிருந்து 1990 ஆம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட தாங்கள் '1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் அங்கு வாழ்ந்தமைக்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
1990 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் நாவலடிப் பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது நாட்டின் பல்வேறு இடங்களிலும் தாங்கள் அகதிகளாக வசித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
எனினும், தற்போதைய சுமுக சூழ்நிலையில் தமது பழைய குடியிருப்பு இடங்களை படையினர் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
தமது வீடுகள், கடைகள் உள்ளடங்கலாக அசையும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் படையினர் அழித்து விட்டே அந்தப் பகுதியில் இராணுவ முகாமை அமைத்துக் கொண்டதாக படை முகாமுக்கு முன்னால் கூடாரமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் தெரிவித்தனர்.
'1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்த நாம், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு எங்களின் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றோம்;.
1990ஆம் ஆண்டு முதல் இராணுவ முகாம் அமைந்துள்ள எங்களின்; காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதுடன், நட்ட ஈட்டையும் பெற்றுத் தந்து எங்களை மீளக் குடியேற்ற வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் தெரியப்படுத்திய போதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாகவே உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளளோம்.
நாவலடிப் பகுதியில் தற்போதுள்ள இராணுவ முகாம் 18 பேரின் காணிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் காரணமாக 18 பேர் தமது வீடுவாசல்களை இழந்திருக்கின்ற போதிலும்;, 02 பேருக்கு மாத்திரம்; பிரதேச செயலகத்தால் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள 16 பேரினதும் காணிகளை பெற்றுத்தர வேண்டும். என்றனர்.
இக்குடும்பங்கள் கடந்த 2016ஆம் ஆண்டு நொவெம்பெர் 02ஆம் திகதியும் நாவலடி படை முகாமுக்கு முன்னால் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஓரமாக கூடாரமிட்டு சத்தியாக்கிரகம் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எவ்வாறேனும் இது பற்றி உயர்மட்டத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து அப்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருந்த சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment