மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பதற்கு சீரான ஏற்பாடுகளைச் செய்து தந்து விவசாயிகளின் வாழ்வில் விடிவு காண அதிகாரிகள் உதவ வேண்டும் என உன்னிச்சைகுளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை 23.08.2018 அவர் விடுத்த வேண்டுகோளில் மேலும் தெரிவித்ததாவது
மட்டக்களப்பு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விற்பனை செய்வதற்கு மாவட்டத் திட்டமிடல் பிரிவு இன்னமும் நிரந்தரமான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லை நெற் சந்தைப்படுத்தும் சபையினூடாகக் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகள் திருப்திப்படும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து தரவில்லை.
விளையும் பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடினர்.
அதனால், உத்தரவாதமற்ற விலையில் தனியார் வியாபாரிகளுக்கே நெல்லை விற்க வேண்டியிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 நெற் களஞ்சியங்களிலும் பிரதேச விவசாயிகள் தமது விளை நெல்லை விற்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இம்முறை மட்டக்களப்பில் தனியார் வர்த்தகர் ஒருவர் விவசாயிகளிடமிருந்து அதி உச்ச விலைக்கு விளை நெல்லைக் கொள்வனவு செய்ததால் விவசாயிகள் காப்பாற்றப்பட்டார்கள்.
இது ஒரு புறமிருக்க பிரதேச விவசாயத்தைப் பாதிக்கும் மணல் அகழ்வு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
மேய்ச்சல் தரை விவகாரம் சர்ச்சைக்குரியதாக தீர்வு காணப்படாத தொடர் பிரச்சினையாகவும் இருந்து வருகின்றது.
காட்டு யானைகளின் தொல்லை தொடர்வது போன்ற பல்வேறு பிரச்சினைகளை பிரதேச விவசாயிகள் இன்னமும் எதிர்நோக்கி வருகின்றார்கள்.
ஏழை விவசாயிகளின் இந்தப் பிரச்சினைகளையும் அரச உயர் மட்ட அதிகாரிகள் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment