மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் கிராம சேவகர் பிரிவில் சனிக்கிழமை (19) மட்டக்களப்பு மாநகர சபையினால் உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு தற்போது நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து டெங்கு விழிப்புணர்வு சுற்றாடல் பாதுகாப்பு பரிசோதனை செயற்றிட்டம் மாநகர சபை ஆணையாளர் வீ.தவராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மட்டக்களப்பு பொலிஸார் மாநகர சபை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் இணைந்து மேற்கொண்ட இவ் டெங்கு நோய் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தினூடாக சுமார் 400 வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதில் தமது வீட்டு வளவினுள் டெங்கு நுளம்புகள் பரவக்கூடியவாறு வைத்திருந்த 10 வீட்டு உரிமையாளர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மேலும் 40 வீட்டு உரிமையாளர்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நீர் நிலைகள் கிணறுகள் நீர்த்தாங்கிகள் தனியார் காணிகள் வடிகான்கள் என்பன விசேட பரிசோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டன.
இதில் மாநகர சபை பதில் ஆணையாளர் ரீ.தனஞ்சயன் மட்டக்களப்பு சுற்றாடல் பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி என்.அபேசிங்க மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இப்பகுதிக்கான பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜெயரஞ்சன் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொணடனர்.
0 Comments:
Post a Comment