(ஏ.ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரியிப் பகுதியில் மணல் அகழ்வு சட்ட விரோதமான முறையில் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு கொலை அச்சுறுத்தலுக்காளானது பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை பகல் 30.08.2017 இடம்பெற்ற இச்சம்பவம்பற்றித் தெரியவருவதாவது… வாகனேரிப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் அகழப்படும் மணல் மூடப்பட்ட கொள்கலன் லொறிகளில் வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றிய உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக தொலைக்காட்சி நிறுவனமொன்றின் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் அங்கு சென்றுள்ளார்.
அவ்வேளையில் காடுகளுக்குள் மறைந்திருந்த நிலையில் ட்ரக்டர், ரிப்பர் மற்றும் லொறிகள் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கும்பலொன்று ஊடகவியலாளரை சுற்றி வளைத்து தொலைக்காட்சி வீடியோ கமெரா, தொலைபேசி என்பனவற்றைப் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டதுடன் ஊடகவியலாளரைத் தாக்கவும் முயற்சித்துள்ளனர்.
சுமார் 45 நிமிட நேரம் அவரைத் தடுத்து வைத்திருந்த கும்பல் அவருக்கு இம்சிக்கும் வார்த்தைப் பிரயோகங்களைச் செய்து உயிரச்சுறுத்தலையும் விடுத்துள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் அகழும் விடயம் வெளியில் வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஊடகவியலாளரை விடுவித்த கும்பல், கைப்பற்றிய வீடியோ கமெரா, மற்றும் கைப்பேசியையும் ஒப்படைத்துள்ளது.
இதுபற்றி ஊடகவியலாளரான செங்கலடியைச் சேர்ந்த குகராசு சுபஜனிடம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ள வாழைச்சேனைப் பொலிஸார் தாம் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment