வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள்கூட சில விரோத குரோத செயல்களைச் செய்து, புதிய அரசியல் யாப்பு உருவாவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் இறந்த எமது உறவுகளுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். என முன்னாள் நாடாளுமன்ற உறு;பபினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
கடந்த 1987 மற்றும் 1991 காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 143 இற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஞாபகார்த்தமாக மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி திங்கட் கிழை (22) புணரமைப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
கொக்கட்டிச்சோலை படுகொலை ஞாபகார்த்த தூபி புணரமைப்பு நிகழ்வுக்காக வேண்டி நாம் மக்கள் பிரதிநிதிகளுக்கும், இப்பகுதியை அண்டிய கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும்தான் அழைப்பு விடுத்திருந்தோம். மாறாக அரசியல் கட்சிகள் சார்ந்து எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளைப் பிரதேசக் கிளை இந்த நிகழ்வைப் பகிஸ்க்கரிப்பதாக என்ககுத் தகவல் கிடைத்துள்ளது. நான் அவர்களை அழைக்கவே இல்லை. நான் இந்நிகழ்வுக்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அர்கள் எவ்வாறு இதனைப் பகிஸ்க்கரிப்பார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற தமிழரசுக்கட்சி, ரெலோ, புளம், ஈபி.ஆர்.எல்.எவ், ஆகிய அரசியல் கட்சிகளின் கிழைகளை நான் இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கவில்லை, மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கேதான் அமைப்பு விடுத்திருந்தேன். இவ்வாறான நிகழ்வுகளை நான் அரசியலுக்குப் பயன்படுத்துவதில்லை. இந்த நினைவுத் தூபிக்கு சுமார் 3 இலெட்சம் ரூபாய் எனது சொந்த நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. இது யாரால் புணரமைக்கப்பட்டுள்ளது என்றுகூட இங்குள்ள விளம்பரப் பலகையில் போடவில்லை. இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வதற்கு நான் தயாராக இல்லை. ஏனைய கட்சிகளும், அக்கட்சிகளின் பிரதேச கிளைகளும் இறந்தவர்களைவைத்து அரசியல் செய்யலாம். அந்த அரசியல் நாம் ஒருபோதும் செய்யக் கூடாது அவ்வாறு செய்தால் அறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையாது.
கடந்த 30 வருட போராட்டத்தில் லெட்சக்கணக்கான பொதுமக்களும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் இறந்திருக்கின்றார்கள். அவர்களின் ஆத்மாக்கள் நமது பிரதேசங்களில்தான் சுற்றிக் கொண்டு திரிகின்றன. இந்த நினைவுத் தூபியில் 143 ஆத்மாக்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் ஆத்மாக்கள் அனைத்தும் தங்களுக்காக என்ன செய்கின்றார்கள் என பார்த்துக் கொண்டிருக்கின்றார்களோ தெரியாது. எனவே அவர்களை வைத்து அரசியல் செய்யாமல் அவர்களுக்காக அரசியல் செய்ய வேண்டும்.
வடக்கு கிழக்கில் உரிமைக்காகப் போராடினோம் உரிமை கிடைக்காத நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இநிலையில் இந்நாட்டில் ஒரு புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நேரத்திலே வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் சில தீய சக்திகள், புதிய அரசியலமைப்பைத் தடுப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள்கூட சில விரோத குரோத செயல்களைச் செய்து, புதிய அரசியல் யாப்பு உருவாவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் இந்த எமது உறவுகளுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
இக்காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், விவசாய அமைச்சர் உள்ளிட்ட சகல மாகாணசபை உறுப்பினர்களுக்கும், அழைப்பு விடுத்திருந்தேன், ஆனால் இவ்விடத்தில் என்னுடன் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் மற்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் ஆகியோர் மாத்திரம்மான் கலந்து கொண்டிருக்கின்றார்கள். ஏனையவர்கள் கலந்து கொள்ளாததையிட்டு மிகவும் மனவேதனையடைகின்றேன். எனவே நாம் பல பலவற்றை இழந்ததற்குப் பின்னரும் நாம் ஒன்றுமையாகச் செயற்படாவிட்டால் இழந்த ஆத்மாக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், விரைவில் இதனை அனைவரும், உணர்ந்து கொள்வார்கள்.
நான் தற்போது வாழும் வாழ்க்கை ஒரு வோணஸ் வாழ்க்கையாகவும், நான் உயிரோடு இருப்பது யாரோ செய்த புண்ணியம் எனக் கருதித்தான்; வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். இதற்காகவேதான் எனது சகல சேவைகளையும். அரசியலில் இருந்தாலும்சரி, அரசியலில் இல்லாவிட்டாலும்சரி, எனது சேவைகள் மக்களுக்காகத் தொடரும் என அவர் தெரவித்தார்.
0 Comments:
Post a Comment