(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை சுனாமி வீடகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் கடும் வாதம்.
மருதமுனையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்கு உட்பட்ட மக்களுக்காக 2007 ஆம் ஆண்டு மருதமுனை மேட்டு வட்டை வீட்டுத்திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில் 86 வீடுகள் இதுவரை மக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளன. இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை கடுமையாக சாடினார்.
கல்முனை பிரததேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (17.08.2017) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதேச மக்கள் சார்பில் கலந்துகொண்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அமைச்சரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வந்தார்.
தொடர்ந்து பேசிய ஏ.ஆர். அமீர்,
மக்கள் உயிரோடு இருந்தால் தான் அபிவிருத்தியை நுகர முடியும் மைதானத்தையும் வீதியையும் அபிவிருத்தி செய்வதற்கு முன்னர் பாதிக்கப் பட்ட மக்களின் வீடுகள் கையளிக்கப்பட வேண்டும். மீண்டும் இந்தப் பிரதேச செயலகத்தில் வந்து பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யச் சொல்கிறீர்களா? கல்முனை கிறீன் பீல்ட், சாய்ந்தமருது பொலி வோரியன் ஆகிய இடங்களில் வீடுகள் கையளிக்கப் பட முடியும் என்றால் ஏன் மருதமுனையில் கையளிக்க முடியாது? இந்தக் கூட்டத்திற்கு இதற்கு முன்னர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது வழமை ஆனால் இம்முறை ஏன் அவர்கள் அழைக்கப்பட வில்லை? என கடுமையாக சாடினார்.
இதற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பதிலளித்து பேசும் போது,
மருதமுனை மேட்டுவட்டை சுனாமி வீட்டுத்திட்டத்தில் மீதமாக உள்ள வீடுகளை வழங்குவதில் ஏற்கனவே ஊழல் நடைபெற்றதால் காலதாமதம் ஏற்பட்டது. அவ்வாறான ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில் நாம் கவனமாக செயற்பட வேண்டும். இதற்காக மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலாளர் அலுவலகத்தின் ஊடக நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டது. இந்தப் பெயர் பட்டியல் மருதமுனை ஜம்யத்துல் உலமா சபைக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் ஜம்யத்துல் உலமா சபை இதுவரை அதனை உறுதிப்படுத்தி பிரதேச செயலாளருக்கு அனுப்பவில்லை என்றார்.
இதனை தொடர்ந்து பள்ளிவாசல்கள் மற்றும் ஜம்யத்துல் உலமா சபையின் தீர்மானம் தாமதிப்பதால் தொடர்து அவர்களில் பதிலை எதிர்பார்க்காமல் அதனை இரத்துச் செய்து உடனடியாக வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அமைச்சர் உரையாற்றும் போது,
மருதமுனை சுனாமி வீடுகளை இரண்டு வாரங்களுக்குள் வழங்க அரசாங்க அதிபர் ஊடாக தான் நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத் திட்டமிடல் பணிப்பார் எஸ்.அன்வர்தீன், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், மாநகர சபை ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.முஸ்தபா(சரீப்), எம்.எஸ்.உமர் அலி, மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.சக்காப், சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன் திணைக்களத் தலைவர்கள், அரச அலுவலகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.( வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
0 Comments:
Post a Comment