அரசியல் தலைமைகள் கூட்டரசாங்கத்தை அமைத்தவுடன் இன ஒற்றுமை வந்து விடமாட்டாது என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் ஏறாவூரில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட நகர சபைக் கட்டிடத்தை பிரதமருடன் இணைந்து திறந்து வைத்து இடம்பெற்ற அபிவிருத்திகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம்,
யுத்தத்திற்குப் பின்னர் அபிவிருத்தி என்ற விடயத்தில் இனங்கள் மத்தியிலே புரிந்துணர்வு இல்லை. அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வதிலே இனங்களுக்கிடையில் இன்னமும் சந்தேகம் நிலவுகின்றது.
அரசியல் தலைமைகள் கூட்டரசாங்கத்தை அமைத்தவுடன் இன ஒற்றுமை வந்து விடமாட்டாது. அது அடி மட்ட சமூக மக்களின் புரிந்துணர்விலிருந்து வர வேண்டும்.
அரச ஊழியர் நியமனங்களில், பதவி நிலைகளில், நிறைவேற்று அதிகாரங்களில் சமத்துவம் பேணப்பட வேண்டும்.
இப்படிப் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில்தான் ஒரு நெருக்கடியான ஆட்சியை எங்களுடைய கிழக்கு மாகாண முதலமைச்சர் சகல கட்சிகளும் சேர்ந்த ஒரு தேசிய அரசாங்கத்தை கிழக்கு மாகாணத்திலே நடாத்திக் கொண்டு வருகின்றார்.
தமிழ் மக்களுக்கு உரிய பங்கு அபிவிருத்திக்குப் போக வேண்டும் என்பதற்காக எனது அமைச்சினூடாக 200 மில்லியன் ரூபாவை மட்டக்களப்பு நகரிலே உட்கட்டமைப்பு வசதிகளுக்காக செலவு செய்திருக்கின்றோம்.
மேலும் வேண்டுகோள்கள் கிடைக்கப் பெறும்பட்சத்தில் அவற்றையும் பரிசீலனை செய்து நிறைவேற்றித் தர தயாராக இருக்கின்றோம்.
அதேபோல, கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பல்லாயிரம் மில்லியன் ரூபாய் செலவிலே திட்டங்கள் அமுலாகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிட்டிய காலத்தில் அரசியலிலே ஏராளமான சவால்களை எதிர் கொண்டது.
முன்னாள் ஆட்சியாளர்களின் எடுபிடியாக இருந்த இந்த ஏறாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் பொதுத் தேர்தலுக்கு முன் தான் பதவியை ராஜினாமாச் செய்வதாக ஒரு நாடகமாடினார்.
முஸ்லிம் காங்கிரஸை மக்கள் மத்தியிலே செல்வாக்கற்றதாக ஆக்க வேண்டும் என்பதுதான் அவரது உள்நோக்கம்
தொடர்ந்து 3, 4 முறை தேசியப்பட்டியல் ஆசனம் கொடுத்தும் மீண்டும் தனக்கு தேசியப் பட்டியல் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அது கிடைக்காமல் போகும் என்ற ஆதங்கத்தினால் மீண்டும் கட்சிக்குள் குழிபறிக்கிற கைங்கரியத்தை அவர் செய்து பார்த்தார்.
அந்த நேரத்திலே எங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு கை கொடுத்தவர் இந்த ஊரைச் சேர்ந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா.
அதனை பொறுப்புணர்ச்சியோடு சொல்லி வைப்பதில் நான் பெருமைப் படுகின்றேன்.
மக்கள் சில கேள்விகளை எழுப்புவதால் நாங்கள் இதனைக் குறிப்பிட வேண்டும்.
முதலமைச்சரின் வெற்றியில் அலிஸாஹிர் மௌலானாவின் பங்கும் உண்டு.
கட்சித் தலைவர் என்கின்ற வகையில் நான் கட்சிக்குள் சலசலப்புக்குள் ஏற்படாமல் இருக்கின்ற விடயத்திலே வெளிப்படையாக சில மனஸ்தாபங்களைக் கையாள வேண்டியுள்ளது.
அலிஸாஹிர் மௌலானா தனது மகளின் திருமண விடயமாக இந்நிகழ்வுக்கு வரவில்லை என்று கூறப்படுகின்ற அதேவேளை அவரது சேவைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
முதலமைச்சர் இந்த மாகாணத்திலே மிக லாவகமாக திறமையாக நிருவாகத்தைக் கொண்டு செல்கின்றார் என்ற விடயத்தைப் பாராட்டுவதோடு இன்னும் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து எதிரிகளை முறியடிக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அடுத்த தேர்தல், அதற்கடுத்த ஆட்சி எல்லாவற்றிலும் கிழக்குப் பூமி சௌபாக்யம் நிறைந்ததாக இன ஒற்றுமை மிளிரக் கூடியதாக மலர வேண்டும். அதற்கான ஆயத்தங்களை நாங்கள் புரிந்துணர்வோடு செய்ய வேண்டும் என்பதை அன்புக் கட்டளையாக முன் வைக்கின்றேன்.” என்றார்.
0 Comments:
Post a Comment