23 Jul 2017

எயிட்ஸ் வராமல் தடுப்பதற்கு ஏற்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் களப்பணி அலுவலர்கள் கரிசனை காட்ட வேண்டும். மாவட்ட எயிட்ஸ் தடுப்பு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர்

SHARE
எயிட்ஸ் நோய் வந்த பின் அவஸ்தைப்படுவதை விட வராமல் தடுப்பதற்கு ஏற்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் களப்பணி அலுவலர்கள் கரிசனை காட்ட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு  பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் (Medical Officer in charge Sexually Transmitted Disease and Aids Control Program Batticaloa District)தெரிவித்தார்.


மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்ததாக களப்பணிகளில் கடமை புரியும் பல்வேறு படித்தரங்களிலுள்ள அலுவலர்களுக்கும் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்பூட்டல் கருத்தரங்கு வியாழக்கிழமை 20.07.2017 வவுணதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அங்கு உத்தியோகத்தர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டிய வைத்தியர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

எயிட்ஸ் ஒரு ஆட்கொல்லி நோய் என்பதாலும் சமூக அந்தஸ்தஸ்து மற்றும் அவமானம் என்பனவற்றாலும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தங்களை மருத்துவ சிகிச்சைகளுக்குக் கூட வெளியே இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்து வரும் நிலைமையை அவதானிக்கின்றோம்.

ஆயினும், எயிட்ஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடியது என்பதில் மருத்துவ உலகம் முன்னேறியிருக்கின்றது.

நகரப் புறங்களை விட கிராம மக்களுக்கு எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கூடிய மட்டத்தில் சென்று சேர்வதில்லை.

அதனால் அவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை எயிட்ஸ் பரிசோதனை செய்து கொள்வதும் குறைவாகவே நடந்து வருகின்றது.
ஆகவே களப்பணிகளில் எந்நேரமும் மக்களோடு சேவையாற்றும் கிராம சேவையாளர்கள், சமூர்த்தித் திட்ட அலுவலர்கள், சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், பெண்கள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் இந்த விழிப்பூட்டலுக்குப் பொருத்தமானவர்கள் எனக் கருதப்படுகின்றது.

எயிட்ஸ் ஒரு உயிர்க் கொல்லி நோய் என்ற பயத்தையும் தாண்டி அதனை வராமல் தடுப்பதற்கும் வந்த பின் அது பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் மக்களிடையே விழிப்புணர்வு அவசியமானது.
எவ்வாறாயினும், இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் எயிட்ஸ் தொற்று அடுத்தவருக்கு பரப்பப்படாமல் இருப்பதையும்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும்  கிராம மக்களிடம் ஊக்குவிப்பதே எமது விழிப்பூட்டலின் நோக்கம்.

இந்தத் தகவலை மக்களோடு இருந்து களப்பணியாற்றும்  உத்தியோகத்தர்கள் மக்களிடம் சேர்ப்பித்து விழிப்பூட்ட வேண்டும் என்பதற்காகவே உத்தியோகத்தர்கள் விழிப்பூட்டப்படுகின்றார்கள்.”என்றார்.

இந்நிகழ்வில் வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, சுகாதார மேற்பார்வை அதிகாரி எஸ். விஜயகுமார், பொது சுகாதார பரிசோதகர்களான  எம். தயாளன், பி. முருகதாஸ் உட்பட அப்பிரதேச செயலகத்துடன் இணைந்து களப் பணியாற்றும் சுமார் 80 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: