16 May 2017

மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.- கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளா் ஏ.எச்.எம்.அன்சாா்

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம் ஏற்பாடு செய்த க.பொ.த சாதரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோா்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (14.05.2017) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தாா். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதிப் பிரதம செயலாளர்,
ஒரு மாணவனுடைய பெறுபேறு வீழ்ச்சியடைகிறது என்றால் என்ன காரணம் என்பதை ஆசிரியர்களும் அதிபர்களும் கண்டறியும் வரை பெற்றோர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பெற்றோர்களாகிய நாம் ஒன்றிணைந்து எமது பிள்ளைகளின் கல்வியை அதிகரிக்க பாடுபட வேண்டும். சில பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி விட்டால் கடமை முடிந்து விட்டது எனக் கருதுகின்றார்கள் இது பிழையான சிந்தனையாகும். இன்று மாணவர்களின் கவனம் வேறு திசைகளுக்கு திரும்பி விடுகின்ற அபாயகரமான ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
காலை முதல் மாலை வரைக்கும் பிள்ளைகளின் கல்வி முன்னெற்றத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பாட ரீதியாக பின்னடைவுகள் மாற்றங்கள் வருகின்றபோது ஆசிரியர்களை அனுகி விசாரிக்க வேண்டும். 

குடும்பத்தோடு இருந்து கொண்டு தொலைக்கட்சி நாடகங்களை பார்பதை பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதி நவீன கையடக்க தொலைபேசிகளை பிள்ளைகளுக்கு எதற்காக வாங்கிக் கொடுக்கிறீர்கள்? படிக்கின்ற வயதில் இவற்றை கொடுத்து பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியை சீரழிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இங்கு வருகை தந்துள்ள பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை ஒழிவு மறைவின்றி இங்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

கல்லூரியின் அதிபர்; எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளருமான எம்.எப். ஹிபத்துல் கரீம், மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கோட்டக்கல்வி அதிகாரி ஜிஹானா ஆலிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைத்தீன்,  கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் செயற்பாட்டாளா் எம்.ஐ.எம்.வலீத் உட்பட அமைப்பின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: