அல்லற்படும் மக்களின் அவலங்களில் பங்கு கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்க திராணியற்றிருக்கும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளியிட்டார் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்;மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் திங்கட்கிழமை (17.04.2017) மாலை நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
வடக்கு கிழக்கிலே உள்ள சில அரசியல் தலைமைத்துவங்களின் அரசியல் சுயநலப் போக்கு காரணமாக மக்களின் காணிகளை இழக்க வேண்டியேற்பட்டள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கலவரங்களில் ஏறாவூர் நான்காம் மற்றும் ஐந்தாம் குறிச்சி கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
வளங்கள் இழக்கப்பட்டுள்ளன உயிர் உடமை அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் கடந்த காலத்தில் நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஏறாவூர் நான்காம் மற்றும் ஐந்தாம் குறிச்சி கிராமங்களுக்கு 8 இலட்சம் பெறுமதியான தலா 20 வீடுகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இன்னும் 150 வீடுகள் மேலதிகமாக தேவைப்படுகின்றன.
முன்னர் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையினால் இந்த எல்லை கிராம மக்கள் காணிகளை இழந்துள்ளார்கள்.
இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனவாதம், மதவாதம், முதலாளித்துவம், வங்குரோத்து அரசியல் எல்லாம் மாற்றமடைய வேண்டும். காலம் காலமாக மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்விழிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் அதன் மூலம் சாதாரண ஏழை மக்களுக்கு விமோசனம் கிட்ட வேண்டும்.” என்றார்.

0 Comments:
Post a Comment