6 Apr 2017

நவகிரி நீர்ப்பாசன சிற்றூழியர்கள் 14 பேரின் நிரந்தர நியமனம் இரத்து

SHARE
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி - நவகிரி பிரதேச சிற்றூழியர்கள் 14 பேரின் நிரந்தர நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து அவ்வூழியர்கள் தமக்கு மீண்டும் நியமனத்தைப் பெற்றுத் தருமாறு கோரும் கடிதமொன்றை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோருக்கு புதன்கிழமை (05.04.2017) அனுப்பி வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிற்றூழியர்கள் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்     வி. மகேஸ்வரனுக்கூடாக தமக்கு மீண்டும் நியமனத்தை வழங்குமாறு கோரும் கடிதத்தை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் குறித்த அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேற்படி நீர்ப்பாசன திணைக்களத்தின் சிற்றூழியர்கள் 14 பேர்  2017 ஜனவரி 31 ஆம் திகதியுடன் இவ்வாறு நிரந்தர நியமனம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தமது கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இருந்து கடிதம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இது பற்றி அவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாம்  2002ஆம் ஆண்டு சமயாசமய (ளுரடிளவவைரவந) அடிப்படையில் வேலையில் இணைந்து 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி நிரந்தர நியமனம் கிடைக்கப் பெற்றோம்.

எனினும், திடீரென இவ்வருடம் ஜனவரி 31 ஆம் திகதியுடன் நிரந்தர நியமனம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த கடித்தை கண்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

2013 ஒக்டோபர் முதல் 2014 ஒக்டோபர் வரையான காலத்தில் 180 நாள் கணக்கிடப்பட்டு அதற்குள் உள்ளடங்காதவர்களே இவ்வாறு நிரந்தர நியமனத்தில் இருந்து இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 180 நாள் காலப் பகுதி என்பது எமக்கு அதற்கு முந்திய வருடங்களில் பூர்த்தியாகி இருக்கிறது.

நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர் என்ற அடிப்படையில் நாங்கள் வங்கிகளிலிருந்து கடன் பெற்றுள்ள நிலையில் தற்போது நியமனம் இரத்தாகியிருப்பதனால் பெற்ற வங்கிக் கடன்களை மீளச் செலுத்த முடியாமல் திண்டாடுகிறோம்.

அத்துடன்  எமது பிள்ளைகளின் கல்வி, நாளாந்த ஜீவனோபாயம் மற்றும் ஏனைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றமுடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

நாம் 2003 ஆம் ஆண்டு முதல் இரவு பகல் பாராமல் எமது பணியினை நிறைவேற்றியுள்ளோம்.

2010 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தில் நவகிரி குளம் உடைப்பெடுக்கும் தறுவாயில் அதனை இலங்கை இராணுவத்துடனும் இணைந்து எமது கடும் உழைப்பாலும் மண்மூடைகள் கொண்டு அணையினை பலப்படுத்தி மாவட்டத்தில் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தத்தை தவிர்ப்பதற்கு உழைத்தோம்.

அவ்வாறு அர்ப்பணித்து உழைத்த எங்களுக்கு நிரந்தர நியமனம் இரத்து செய்யப்பட்டமை மிகவும் மன வேதனையை  ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நிரந்தர நியமனம் இரத்து செய்யப்பட்டமையினால் நடுத்தெருவுக்குத் தள்ளப்பட்டதுபோன்ற கையறு நிலையை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கான நல்ல தீர்வொன்றை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர்கள் தமது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 


SHARE

Author: verified_user

0 Comments: