மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கொல்ல காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி நளின் வீரரத்ன தெரிவித்தார்.
கொஸ்கொல்ல காட்டுப் பகுதியில் புதை பொருட்களைத் தோண்டும் பூஜை, மந்திரம் போன்ற நடடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு பிரதேசத்திற்கு அறிமுகமில்லாதவர்கள் சிலர் நடமாடுவதாக கிராம வாசிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் விஷேட ரோந்து அணி செவ்வாய்க்கிழமை இரவு ஸ்தலத்திற்குச் சென்று மறைந்திருந்தது.
அவ்வேiளியில் வான் ஒன்றில் வந்திறங்கிய புதைபொருள் தோண்டும் நபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக நளின் வீரரத்ன தெரிவித்தார்.
இந்நடவடிக்கையின்போது கண்டியைச் சேர்ந்த 2 பேர், மஹியங்கனை 2 பேர், மினிப்பே 1, பண்டாரவளை 2, செங்கலடி 2 மற்றும் கோப்பாவெளி 1 ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இதன்போது வான், மந்திரித்து பூஜை செய்யும் பொருட்கள், திறப்புக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டோர் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்காக கரடியனாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையில் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி நளின் வீரரத்ன, கொழும்புத் தலைமையக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி பி. புஸ்பகருணா, மட்டக்களப்பு தொல்பொருள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த கே.பி.ஆர். சமன் பிரிய, திருகோணமலை தொல்பொருள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி பி. ரணசிங்ஹ உட்பட இன்னும் சில அலுவலர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இச்சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments:
Post a Comment