6 Mar 2017

தற்கால இளைஞர் சமூகம் போதைப் பொருள் உலகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதனை முறியடிக்க வேண்டும்.

SHARE
தற்கால இளைஞர் சமூகம் போதைப் பொருள் உலகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதனை முறியடிக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திற்கான சமூகப் பொலிஸ் பிரிவு ஒருங்கிணைப்பாளர்,
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரெட்ணம்

தற்கால இளைஞர் சமூகம் போதைப் பொருள் உற்பத்தி, விற்பனை மற்றும் பாவனைக்கேற்ற விதத்தில் புது வித உலகமாக வடிவமைக்கப்பட்டிருப்பபதாக கிழக்கு மாகாணத்திற்கான சமூகப் பொலிஸ் பிரிவு ஒருங்கிணைப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரெட்ணம் தெரிவித்தார்.

இலங்கை தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வந்தாறுமூலை மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்துறைப் பயிலுநர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை, வீதிப் போக்குவரத்து, விபத்துக்களை தடுத்தல், போக்குவரத்து விதிமுறைகளும் வீதி ஒழுக்கங்களும் சம்பந்தமான விழிப்புணர்வு திங்கட்கிழமை (06.03.2017) இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது அவர் தெரிவித்ததாவது, தற்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சிதைவடைந்துள்ளது.
போதை வஸ்துவுக்கு ஏற்றமாதிரியான வாழ்க்கை முறைக்கு இளைஞர் உலகம் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தற்கால வாழ்க்கை முறை அவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
முன்னர் இருந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் பெற்றோர்கள், பெரியவர்கள் அக்கறை கொண்டுவழிகாட்டக் கூடியவர்கள் இருந்தார்கள்.
ஆனால், தனிக் குடும்ப வாழ்க்கை முறை தொடங்கியதன் பின்னர் அவ்வாறான கண்காணிப்புக்கள், அக்கறைகள் எல்லாம் சிதைவடைந்து விட்டன.

போதைப் பொருளுக்கு அடிமையாகின்ற எவரும் குற்றச் செயல்களைச் செய்வதற்கு ஒரு போதும் தயங்கப் போவதில்லை.

போதைப் பொருள் பாவனையே நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கின்றது.

குற்றச் செயல்கள் ஒருவரது சொந்தக் குடும்பத்திற்குள்ளேயும் நடக்கலாம், வெளியிலும் ஏற்படலாம் அவ்வாறானதொரு நிலையில் தற்போது சமூகம் இருந்து கொண்டிருக்கின்றது.

பெண்கள் சிறுவர்களுக்குரிய பாதுகாப்பிடமாக போதைப் பொருள் சூழ்ந்த இந்த உலகம் இல்லை.

யாரை மிகவும் மிகவும் நேசிக்கிறோமோ அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானால் அவர்களும் தங்கள் பெண் பிள்ளைகளை, சககோதரிகளை, மற்றும் உறவினர் உறவினரல்லாத பெண்களை வயது உறவு வித்தியாசமின்றி துஸ்பிரயோகம் செய்யலாம். அவ்வாறு நடந்து கொண்டும் இருக்கின்றது.

இளைஞர் சமுதாயம் ஒரு பாதையிலும் மூத்தோர் இன்னொரு பாதையிலும் வெவ்வேறு இணைய முடியாத திசைகளில் பயணிக்கின்றார்கள்.
இந்த இரு சாராரும் மீண்டும் நமது பழைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்கு இணைய வேண்டும்.

யுத்தம் இடம்பெற்ற போது எத்தனையோ பிரிவினைகள் இருந்தன. நான் வேறு நீ வேறு என்று இன மத மொழி பிரதேச ரீதியில் பிரிந்திருந்தோம். ஆனால் இனி அவ்வாறு பிரிந்திருக்க வேண்டி அவசியமில்லை.

எல்லோரும் ஒன்றாக நன்னெறி என்ற பாதையில் பயணிப்போம்” என்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: