4 Mar 2017

இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு இந்த அரசாங்கப் பதவிக் காலத்திலேயேதான் எட்டப்பட வேண்டும். சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க அழைப்பு

SHARE
இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு இந்த நல்லாட்சி அரசாங்கப் பதவிக் காலத்திலேயேதான் எட்டப்பட வேண்டும் என தான் உட்பட எல்லோரும் அவாவுறுவதாக காணி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் வாவி மீனவர் சமூக மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வெள்ளிக்கிழமை 03.03.2017 வழங்கி வைக்கப்பட்டன.

மீனவர்களுக்கான வாழ்வாதார உதவியாக 10 வாவி மீன்பிடித் தோணிகளும், 61 வலைகளும் 27 மீனவக் குடும்பங்களுக்கு வழங்கி வைத்து தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது@

ஆளுமை உள்ள முதலமைச்சர் கிழக்கு மாகாணத்துக்கு கிடைத்திருப்பது அனைவருக்கும் நன்மையளிக்கும் விடயம்.

கிழக்கிலுள்ள மனித வளங்கள், மற்றும் இயற்கை வளங்கள் என்பன வீணடிக்கப்படாமல் இந்தப் பிரதேசத்தின் ஒவ்வொரு குடும்பங்களினதும், நாட்டினதும் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் அக்கறையாக இருக்கின்றார்.

அதற்காக அரசாங்கத்தை மட்டும் நம்பியிருக்காது சர்வதேச முதலீட்டாளர்களைக் நாட்டுக்குக் அழைப்பித்து வந்து கிழக்கில் முதலீடு செய்யும்படி சர்வதேச முதலீட்டு மாநாட்டை கொழும்பில் நடாத்தினார்.
அப்பொழுதுதான் கிழக்கு முதலமைச்சரின் அபார ஆளுமை அனேகருக்குத் தெரிந்தது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் வழிவகைகளைக் கண்டு பிடிப்பதிலும் தொழில்களைப் பெற்றுக் கொடுப்பதிலும் கிழக்கு முதலமைச்சர் அதிக சிரத்தை எடுத்து வருகின்றார்.

முதலமைச்சர் முயற்சிக்கும் கிழக்கு அபிவிருத்தியில் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் கட்சி இன மத பேதங்கள் காட்டி முரண்பட்டு நிற்க வேண்டிய அவசியமில்லை.

சுற்றுலாத்துறையை வளப்படுத்துவது கொண்டு இளைஞர் யுவதிகள் சிறந்த பொருளாதார முன்னேற்றங்களை அடைந்து கொள்ள முடியும்.
அதேநேரம் இங்குள்ள சுற்றுலாத்துறையில் பயிற்சி பெற்று அந்த அனுபவத்தையும் சான்றிதழையும் வைத்துக் கொண்டு வெளிநாடுகளிலும்; உயரிய அந்தஸ்துடன் கூடிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.

அதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் மிகுந்த கவனத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.
இங்கே பரவலாக காணிப் பிரச்சினை இருப்பதாகச் சொன்னார்கள். காணிக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சரும் நானேதான். எனவே, நீங்கள் இந்தப் பகுதியில் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பேன் என்பதை பொதுவில் அறியத் தருகின்றேன்.” என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட அமைச்சு அதிகாரிகள் உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: