1 Mar 2017

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களை உபாதைக்குள்ளாக்கியமைக்கு பணிப்புறக்கணிப்பு

SHARE
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களை உபாதைக்குள்ளாக்கியமைக்கு கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனத்தையும் விசனத்தையும் வெளியிட்டுள்ளதுடன், இதற்கெதிரான நடவடிக்கை எடுக்கப்படும் வரை
காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் காலை  நடைபெற்ற ஊழியர் சங்கத்தின் விசேட கூட்டத்தினை அடுத்து தொழில் சங்க நடவடிக்கையினை இன்று 01.03.2017 (புதன்கிழமை) முதல் முன்னெடுப்பதென்றும், திருமலை வளாகத்தின் முன்னால் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதென்றும் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜசேகரம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர்,

கடந்த செவ்வாய்க்கிழமை (28.02.2017) திருமலை வளாகத்தில் எமது ஊழியர்களையும் நிருவாக உத்தியோகத்தர்களையும் திருமலை வளாக மாணவர்கள் அவர்களது கடமைகளை நிறைவு செய்து வீடுகளிற்கு செல்லவிடாது சிறைப்பிடித்து தடுத்தமையானது மிகவும் கண்டிக்க தக்கதாகும்.

இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் பாலூட்டும் தாய்மார்கள் வெளியில் செல்ல முடியவில்லை. தங்கள் குழைந்தைகளை பின்னேர வகுப்புகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை, ஊழியர்களில் சிலர் மருத்துவ ஆலோசனைகளுக்கு முன் அனுமதி எடுத்தும் வைத்திய சாலைகளுக்கு செல்ல முடியவில்லை. இரவு நேர போசனம் எடுக்க முடியவில்லை. இது போன்ற நடவடிக்கைளை தடுத்தமையானது அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும்.

இது தொடர்பில் பொலிசாருக்கு உரிய நேரத்தில் தெரிவித்திருந்தும் அவர்கள் ஊழியர்களை வெளியில் கொண்டுவருவதற்கு ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டது பொலீசார் மீது எமக்குள்ள நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளது.

மேலும் காரணங்கள் எதுவும் தெரிவிக்காது திருமலை வளாக மாணவர் சங்கம் சம்பந்தமே இல்லாத கல்விசாரா ஊழியர்களை இவ்வாறான உபாதைக்கு உள்ளாக்கியதற்கு எமது சங்கம் கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை எதிர் காலங்களில் இவ்வாறான சம்பவம் இடம் பெறாமல்  இருக்க உரிய முறையில் அவர்களுக்கு தக்க தண்டனையை தயங்காமல் வழங்க உயர்மட்ட நிருவாகம் முன்வர வேண்டும் என்பதை வற்புறுத்தியும் எமது திருமலை வளாக சங்க உறுப்பினர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை  மேற்கொள்வதோடு வந்தாறுமூலை வளாகம், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் ஆகியன இன்று 01.03.2017 நண்பகல் 12 மணியிலிருந்து பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்கின்றது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: