நாம் முடியோடும் கொடியோடும் வாழ்ந்த தமிழன் என்பதை மறக்கக் கூடாது. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்குடாத் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி. மாணிக்கவாசகத்தின் 41வது மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தியின் 28வது நினைவு தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 12.03.2017 செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய துரைராஜசிங்கம்@ 1965ஆம் ஆண்டு காலப்பகுதி என்பதும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஒரு இக்கட்டான கால கட்டம்.
அதற்கு முன்னிருந்த தமிழ்பேசும் சமூகம் என்கின்ற நிலைமை 1965இலே மாறியிருந்தது. தமிழ் பேசும் சமூகங்களில் ஒரு அங்கமான, நாங்கள் அரவணைத்துக் கொண்டிருந்த முஸ்லிம் மக்கள் அப்போது சற்றுக் குழம்பியிருந்தார்கள்.
தமிழழரசுக் கட்சியோடு நாடாளுமன்றம் சென்றிருந்த முஸ்லிம்கள் ஆளுங்கட்சியினரோடு சேர்ந்து கொண்டார்கள். இதன் விளைவாக தமிழ் பேசும் மக்களிடையே விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.
முஸ்லிம் மக்கள் அரசோடு சேரந்து அரசியல் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக எங்களுக்குப் பெரிய சவால் காத்திருந்தது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியிலே 1965இல் போட்டியிட்ட மாணிக்கவாசகம் அவர்கள் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
1970 பொதுத் தேர்தலிலும் இதே நிலைமைதான். ஆனால், சற்று வித்தியாசமாகமாக இந்தத் தேர்தலில் தமிழருக்குள் முன்வந்த அரசியல் தலைமைகளே தமழிர்களின் வாக்குகளைப் பிரித்ததன் காரணமாக இந்தத் தோல்வியைச் சந்திக்க வேண்டியேற்பட்டது.
தமிழர்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்ற காலமாக 1977 இருந்தது. தமிழீழப் பிரகடனம் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு எங்கணும் உணர்ச்சிப் கொந்தளிப்பு. இளைஞர்கள் பட்டாளமாக உணர்ச்சிப் பிரவாகத்தில் பங்கெடுத்த வேளை அது.
கல்குடாத் தொகுதியிலே நாம் கண்ட தோல்வியை தமிழீழக் கனவுக்கு கிழக்கு ஒத்துழைக்கவில்லை என்று மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா பிரச்சாரம் செய்யுமளவிற்கு தமிழர்கள் 1977 பொதுத் தேர்தலிலே கல்குடாத் தொகுதியில் தோல்வி கண்டோம். ஆனால் அது வெறும் 555 வாக்குகள்தான் தோல்வியை தமிழர்களுக்கு நிர்ணயித்தது.
இந்தத் தவறுக்காக நாம் இப்பொழுதும் வருந்த வேண்டியுள்ளது.
நாம் இப்பொழுதும் இக்கட்டான கால கட்டத்தில் இருக்கின்றோம் என்பதை நமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவும் கூறி வருகிறார்.
ஆகவே, இந்த இக்கட்டுக்களைக் களைவதற்கு நாம் இணைந்து முயற்சித்தாக வேண்டும்.
நாம் முடியோடும் கொடியோடும் வாழ்ந்த தமிழன் என்பதை மறக்கக் கூடாது.
0 Comments:
Post a Comment