12 Mar 2017

அருட் பேராசிரியர் சிறிதன் சில்வஸடர் அவர்களின் ஐந்தாவது ஆண்டின் நினைவலை

SHARE
(க.விஜி) 

உலகிலே கோடனு கோடி மானிடர் பிறக்கின்றனர். இவர்களில் ஒவ்வொரு மனிதனும், தனித்தனி தன்மை வாய்ந்தவனாக வாழ்ந்து மறைந்து விடுகின்றான்.

ஒரு மனிதன் சாதனை படைப்பதற்கு ஒரு நிமிடம், ஒரு நாள், ஒரு சில வருடங்கள், ஏன் அவனது ஆயுள் காலம் முழுவதுமே தேவைப்படலாம். அந்த வகையில் 1962 ஆம் ஆண்டு மார்கழி 17 இல் பிறந்தார். அருட் பேராசிரியர் சிறிதன் சில்வஸடர். அவர் சிறப்பாகக் கல்வி கற்று, 17.08.1993 இல் கத்தோலிக்க மத குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். சிறிதரன் குருவானார். சாதனை மேல் சாதனைகள் படைத்த ஒரு மாமனிதராக நினைவு கூருகின்றோம்.

தமிழ் மக்களின் வாழ்வியலோடு, அனர்த்தங்கள் தொடர்கதையாகவே நடைபெற்ற, நடைபெறுகின்ற ஒரு காலகட்டம் இதுவாகும்.

இவ்வாறான நெருக்கடிகள் நிறைந்த வேளைகளில், ஏழைகள், இன்னலுற்றவர்களின், இதயங்களைத் தொட்டு நின்று பணியாற்றி, மறைந்தும் மறையாமல் துலங்கி நிற்கும் தாரகையே சிறிதரன் சுவாமி அவர்கள், என எல்லோராலும் இன்றும் அழைக்கப்படுகின்றார்.

தனது சின்ன இதயத்திலே ஆயிரமாயிரம் பல்லின மக்களை, தனது பணி மூலம் இருத்தி, நிறைவு கண்ட இளந்துறவி எமது மறைந்த சிறீ பாதர் அவர்கள்.

சமய சமூக, கல்வி கலாசார மேம்பாட்டுத் திட்டங்களை செயற்படுத்துவதே குருவானவர்களின் பணியாக அமைகின்றன. இவ்வாறான அத்தனை பணிகளையும் நீதி, நேர்மை, நியாயத்துடன் நிறைவேற்றிய ஒரு பணி மகனாக நாம் அவரைக் கண்டோம். இரவு, பகல் பாராது மறைமாவட்டங்களில் சிறப்பு பணிளாற்றிய சேவையாளன் இவராகும்.

இவரது பணியானது 1993-1994 திருகோணமலை, 1994-1995 மூதூர், 1995-1998 மட்டக்களப்பு கல்லாறு, ஆகிய பங்குப் பணித்தளங்களில் புனித பணியாற்றிய பின்னர், பொறுப்புமிக்க சமூகப் பணியான எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி. கிங்ஸ்லி சுவாமி பிள்ளை ஆண்டகை அவர்களால் அடையாளங் காணப்பட்டு நியமனம் பெற்றார்.

எமது மண்ணை முப்பது வருட கால யுத்தம் முத்தமிட்ட வேளை பல தரப்பட்டவர்களினதும் முகாம்கள், முழு வீச்சாகச் செயற்பட்டு, பல தோரணைகளிலும் இழப்புக்களும் அதனை அடுத்து ஏற்பட்ட நிர்க்கதியான மக்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இப் பாரிய பொறுப்பினை ஆயர் அவர்கள் எமது சிறிதரன் குருவிடமே ஒப்படைத்தார். இவரோடிணைந்து சில குருவானவர்களும், தொண்டர்களும் சீரிய பணியாற்றினர்.
2004 இல் கடற்கோள் சுனாமி என்ற பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சின்னா பின்னப்படுத்தியது. சில நிமிடங்களே அக்கோர தாண்டவம். எண்ணற்ற மக்கள் எல்லையில்லா துன்பத்தை அனுபவித்தனர். இவர்களுக்கான உணவு, உடை, உறையுள் போன்ற அத்தியாவசிய தேவைகளின் ஒரு பகுதியினை அருட்தந்தை தலைமையில் எகெட் கரிட்டாஸ் நிறுவனம் நிறைவேற்றியது. இன்று அவர் எம்முடன் இல்லை, அவரால் முன்னெடுக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகளின்   பயன்பாட்டை எமது பாதிக்கப்பட்ட மக்கள் பெற்று வாழ்கின்றனர்.

சமுகத் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி, சிறந்த திட்டமிடல் மூலம் விளைதிறனைப் பெறுவதில் அந்த மகான் வெற்றிகண்டார் சமதாய கடமைகளுக்காக தன்னை அர்ப்பணித்து மறைந்த அருட்பணியாளர் சிறிதரன் சில்வெஸ்ரர்.தொட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வைப்பதே நாம் அடிகளாரின் நித்திய இளைப்பாற்றிக்காகச் செய்யும் கடமையாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: