மட்டக்களப்பு - கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மது உற்பத்தி நிலையம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கிறது.
மட்டக்களப்பில் தொடர்ந்தும் பொதுமக்களுக்கு எதிரான இதுபோன்ற மது உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் நடைபெருகின்றபோதும் அது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியதின் விளைவே இன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாக அமைந்துள்ளது.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற மனநிலை நல்லாட்சியிலும் தொடர்கிறது. இந்த நிலையில் உண்மைகள் வெளிவருவதை தடுப்பதற்கு அதிகார வர்க்கம் முயற்சி செய்து வருகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
குறித்த ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுத்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் அதற்கெதிராக வீதியில் இறங்கி ஊடகவியலாளர்கள் போராடவேண்டிய நிலையேற்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 Comments:
Post a Comment