2 Mar 2017

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் தாமதம்..!

SHARE
(அஸ்லம் எஸ்.மௌலானா)

அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதம் கடந்தும் கூட கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை மேலும் தாமதமடைவதனால் பலர் அந்த நியமனத்தை பெறுகின்ற வாய்ப்பை இழக்கும் அபாயம் காணப்படுகிறது என அம்பாறை மாவட்ட சு
யாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

"கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபது வருட காலமாக பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற 445 தொண்டர் ஆசிரியர்கள், தமக்கான நிரந்தர நியமனத்தை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

எமது சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் காரணமாக தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கடந்த ஜனவரி மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. எனினும் இவர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண சபையினால் இன்னும் பூர்வாங்க ஏற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினோம். இதன்போது இந்த நியமனங்களை வழங்குவதற்கான அனுமதி, மத்திய கல்வி அமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றிடமிருந்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இன்னும் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனையும் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

நியமனம் வழங்கும் நடவடிக்கை இன்னும் இன்னும் தாமதமடையுமானால் எமது தொண்டர் ஆசிரியர்களுள் பலர் உரிய வயதெல்லையைக் கடந்து, கைசேதமடைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என அஞ்சுகின்றோம்.
vஆகையினால் தாமதங்கள், இடர்பாடுகள் எல்லாம் களையப்பட்டு, எமது தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகத்தினர் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்" என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: