22 Feb 2017

முறக்கொட்டான்சேனையில் மனித எச்சங்களைத் தோண்டும் ஆய்வுப் பணி நிறைவு

SHARE
மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனையில், இராணுவ முகாமுக்கு அருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடத்தைச் சூழ, மீண்டும் ஆய்வு செய்யும் வகையில் திங்கட்கிழமை தொடங்கப்பட்ட நடவடிக்கை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை   காலையுடன் 21.02.2017 நிறைவு பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


இதற்கமைய, திங்கட்கிழமை காலை 9 மணிதொடக்கம் மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது, கடந்த ஒக்டோபர் மாதம் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களைப் போன்ற மேலும் சில எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அத்துடன், துருப்பிடித்த இரும்புக் கம்பிகள், மண்மாதிரிகள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வியின் உத்தரவுக்கமைய ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்துக்கு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சிரேஷ்ட வைத்திய நிபுனர் எம். சிவசுப்பிரமணியம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பி.சி. சுரங்க பெரேரா, கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அஸித்த கீர்த்தி, மாத்தளை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் டி.ஐ. வைத்தியலங்கார, புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஜே.ஏ.ரி.வி. பிரியந்த ஆகியோர் அடங்கிய விஷேட குழு விஜயம் செய்திருந்தது.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான நெடுஞ்சாலை அருகே, முறக்கொட்டாஞ்சேனையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில், தனக்குச் சொந்தமான காணியில் ஒருவர், மலசலகூடத்தை அமைக்கும்போது, கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி, அந்த இடத்தில் எலும்பு எச்சங்களும், டயர் மற்றும் புகையிரத சிலிப்பர் கட்டைகளை எரித்த கரிகளும் தென்பட்டுள்ளன. இதனையடுத்து மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களும் அகழப்பட்ட இடமும், மறுநாள் பரிசோதிக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த இடத்தை மேலும் அகழ்வு செய்யவும் எச்சங்களைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டதோடு, அந்தப் பகுதியில் எந்தவித அகழ்வுப் பணியிலும் ஈடுபட வேண்டாம் என, வீட்டு உரிமையாளருக்குக் கட்டளையிடப்பட்டு, குறித்த பகுதிக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அங்கிருந்த பொலிஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதோடு வீட்டு நிர்மாணப் பணிகளை மீளவும் ஆரம்பிக்கலாம் என்று வளவின் உரிமையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: