22 Feb 2017

பேஷ்புக் அவதூறுக்கு எதிராக கோறளைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் 200 ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்

SHARE
மட்டக்களப்பு வாழைச்சேனை – கோறளைப்பற்று பேஷ்புக் அவதூறுக்கு எதிராக கோறளைப்பற்று பிரதேச செயலக 200 ஊழியர்கள் புதன்கிழமை (22.02.2017) வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமது பிரதேச சபைச்  செயலாளரின் நடவடிக்கைகளையும் அங்கு கடமை புரியும் ஊழியர்களின் செயற்பாடுகளையும் அவதூறான முறையில் விமர்சித்து பேஷ்புக் மூலம் குழப்பங்களை ஏற்படுத்தும் நபரைக் கைது செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரி நின்றனர்.

கோறளைப்பற்று பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்யுமாறும் கோரி வாழைச்சேனை பொலிஸாரிடம் கோரிக்கை மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இச்சபையின் 195 ஆளனியின் 137 தமிழர்களும் 53 முஸ்லீம்களும் பணிபுரிகின்றோம். எம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து இரண்டு சமூகங்களைச் சேர்ந்தோரையும் கடந்த 5 வருடங்களாக கட்டிக் காத்து வருகின்றார். அவர் சபையின் செயலாளர் என்ற வகையில் 5000 ரூபாவிற்கு குறையாத மேலதிக படியினையும் தொலைபேசிக்கட்டணமாக 2000 ரூபாவும் ஒவ்வோரு மாதமும் பெறமுடியும்.

அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களுக்கான பிரயாணக் கொடுப்பனவுகளையும் பெற அனுமதியுன்டு. ஆனால் அவற்றை அவர் இன்று வரை பெற்றுக் கொண்டதே இல்லை.

கடந்த 05 வருடங்களில் நூற்றுக்கணக்கான கிராம மட்ட சங்கங்களும், ஒப்பந்தகாரர்களும் இப்பிரதேச சபையில் ஒப்பந்த வேலைகளை பெற்றுள்ளனர். இவ்வொப்பந்தகாரர்களும், பிரதேச சபையினால் நாளாந்தம் நன்மை பெறுவோரும் எமது செயலாளரின் கறை படியாத கரங்களின் நாணயத்தை உறுதி செய்ய தயாராகவுள்ளனர். சபையின் திட்டமிடல் நிதி நிர்வாகம் மற்றும் காசாளர் போன்ற முதன்மை பொறுப்புக்களில் தமிழ் உத்தியோகத்தர்களே உள்ளனர்.
இந்நிலையில் சில நயவஞ்சகர்கர்கள் திரை மறைவில் இச்சபைக்கும், எமது செயலாளருக்கும் எமது உத்தியோகத்தர்களுக்கும் கௌரவ முதலமைச்சர் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்த முனைகின்றனர்.

கடந்த 05 வருடங்கள் இப்பிரதேச சபையின் செயலாளராக பணியிலிருக்கும் எஸ். எம். சிஹாப்தீன் அவர்களுக்கெதிரான ஒரு சிறு துரும்பையும் குற்றச் சாட்டாக கொண்டுவர முடியாது என்பதை சாட்சியம் பகர்கின்றோம்.
தற்போது காழ்ப்புணர்ச்சியினாலும், பொறாமையினாலும் வெந்து சாகும் இந்த விசமிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டணை பெற்றுக் கொடுத்து இப்பிரதேசத்தினதும். இச்சபையினதும் வளர்ச்சிக்கு பங்காற்ற நாங்கள் இன மத மொழி வேறுபாடின்றி ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உறுதியுடன் நிற்கின்றோம் என்பதை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம்  பிரகடனம் செய்கின்றோம்.




SHARE

Author: verified_user

0 Comments: