மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக விடுதிக்கு முன்னால் புதன்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் வாகனத்தால் மோதுண்டு யுவதிகள் இருவர் படுகாயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செலுத்தி வந்த பொலிஸ் வாகனம் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த இரு யுவதிகளின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்தது.
வாகனத்தைச் செலுத்திய சாரதியான பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த கந்தசாமி நிஸாந்தினி (வயது 20), இளையதம்பி மஞ்சு (வயது 19) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
இந்த யுவதிகள் இருவரும் வீதியின் வலது பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தபோது பொலிஸ் விடுதிக்குள்ளிருந்து வெளியில் வந்த பொலிஸ் வாகனம் யுவதிகளை மோதித் தள்ளியதில் அவ்விருவரும் வீதியோரத்திலுள்ள வடிகானுக்குள் விழுந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்னாயக்க விசாரணைகளை மேற்கொண்டார்.
சம்பவ இடத்திற்கு முன்னால் இருந்த வர்த்தக நிலையத்திலுள்ள சீ.சீ.ரீ.வி கமெராவில் குறித்த விபத்து பதிவாகியுள்ளதுடன் அதன் உதவியோடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment