29 Jan 2017

மட்டக்களப்பில் மதுப்பாவனைக்குள்ளான ஆண்களையும் பெண்களையும் மீட்டெடுக்க வேண்டும் விமோச்சனா இல்ல நிறைவேற்றுப் பணிப்பாளர் செல்விகா சகாதேவன்

SHARE
மட்டக்களப்பில் ஆண்களில் 80 சதவீதமானோரும் பெண்களில் 30 சதவீதமானோரும் மதுவுக்கு அடிமையாகியிருப்பதால்
அவர்களை மீட்டெடுக்க வேண்டியுள்ளதாக மட்டக்களப்பு “விமோச்சனா” மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு இல்ல நிறைவேற்றுப் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் nரிவித்தார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் ஞாயிறன்று (29.01.2017) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள், குடும்பநல மருத்து மாதுக்கள், கிராம சேவையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
எதிர்கால மாணவர் சமுதாயம் “குடி நோயாளிகளாக” வருவதைத் தடுப்பதற்காகவே மாணவர்கள் மத்தியில் போதையொழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது உள்ள வாழ்க்கை முறையின்படி இரவு முழுவதும் தந்தை குடிவெறியில் அலறுவார் அக்கிரமங்கள் புரிவார், விடிந்ததும் தாய் குடிக்காமலேயே தந்தையின் அக்கிரமங்களால் பாதிக்கப்பட்டவராக கூக்குரலிடுவார் இந்த வகைச் சூழலுக்குள் அகப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் விரக்தியும் நிச்சயமற்றதாகவும் மாறிவிடுகின்றது.

அத்துடன், பெற்றோரின் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் பிள்ளைகள் நெறி தவறிப் போவதற்கும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. துஷ்பிரயோகங்களும் இதன் விளைவாக இடம்பெற்று விடுகின்றன.
மன உளைச்சல், உடல் நலக் குறைவு, பொருளாதார இழப்பு, நெறி பிறழ்வான நடத்தை, சமூக அந்தஸ்து இழப்பு, ஆரோக்கியமற்ற சமுதாய உருவாக்கம் இவ்வாறு பல்வேறுபட்ட பின்தொடர் விளைவுகள் போதைப் பொருள் பாவனையால் ஏற்படுகின்றன.

அதனாலே கல்விப் புலத்தோடு உள்ள பாடசாலை நிருவாகம்,  மாணவர், பெற்றோர் ஆகியோருக்கு போதையொழிப்பு விழிப்புணர்வில் முன்னுரிமையளிக்குமாறு வேண்டி நிற்பதோடு செயற்திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றோம்.

போதை மற்றும் மதுப் பாவனையில் மட்டக்களப்பு மூன்றாமிடத்தில் உள்ளது.
இந்த மாவட்டத்தை அந்தப் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்குவதற்கே நாம் முயற்சிக்கின்றோம். ஆயினும், இது ஒரு சில ஆர்வக் குழுக்களினால் மட்டும் சாதித்து விடக் கூடிய ஒரு காரியமல்ல. சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த முயற்சிக்கு தங்களை அர்ப்பணித்து உதவ வேண்டும்.” என்றார்.

கருத்தரங்கில் போதைப் பொருள் விழிப்புணர்வு பற்றிய கையேடுகளும் விநியோகிக்கப்பட்டன.

SHARE

Author: verified_user

0 Comments: