29 Jan 2017

முறையற்ற வழிமுறையில் திருமணத்தை நடத்தி வைக்கும் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்குக! பள்ளிவாசல் நிருவாகம் அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு.

SHARE
விவாகப் பதிவுக்கு முன்னர் கடைப்பிடிக்க வேண்டிய வழமைகளை மீறி முறையற்ற வழிமுறையில் திருமணத்தை நடத்தி வைக்கும் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஏறாவூர் மஸ்ஜிதுர் றிபாய்யி பள்ளிவாசல் நிருவாகம் மாவட்ட
அரசாங்க அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அப்பள்ளிவாசலின் தலைவர் யூ.எல். முஹைதீன் பாவா தெரிவித்தார்.

இதுபற்றி இலங்கைப் பதிவாளர் நாயகம், மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண பதிவாளர் நாயகம், ஏறாவூர் பிரதேச செயலகப் பதிவாளர் மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@ எமது மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் பரிபாலனத்திற்குட்பட்ட ஏறாவூர் 2 சி பிரிவில் வசிக்கும் 18 வயதைப் பூர்த்தி செய்யாத ஒரு இளைஞன் கடந்த 16.01.2017 அன்று திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் எமது பள்ளிவாசலின் முறையான கடிதத்தைப் பெற்றிருக்கவில்லை.
எமது பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்படும் பொதுவான மார்க்க வழக்குகளின்படி தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் பரிபாலனத்திடமிருந்து முறையான சான்றுக் கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

சமூகத்தில் இடம்பெறும் மோசடிகளையும், ஏமாற்றுக்களையும், வீண் குழப்பங்களையும் சமூகச் சீரழிவுகளையும் தவிர்க்க உதவுமென்பதால் இந்த வழிமுறை நீண்ட காலமாகக் கையாளப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.
ஆயினும், இதனைக் கருத்திற் கொள்ளாது ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு பதிவாளர் இந்த வழிமுறை விதிகளைப் புறந்தள்ளிவிட்டு எதேச்சாதிகாரமாக குறித்த இளைஞனுக்குத் திருமணப் பதிவைச் செய்து வைத்து திருமணம் நடக்க உதவியுள்ளார்.

இது சமுதாயக் கட்டுக் கோப்பைச் சீர் குலைக்கும் என்று அஞ்சப்படுவதால் குறித்த பதிவாளரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பிட்ட பதிவாளர் இதற்கு முன்னரும் அவரது தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக எச்சரிக்கப்பட்டவர் என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: