13 Jan 2017

பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த தொலைத் தொடர்பு சாதனங்கள் விற்பனை நிலையம் உடைத்து திருட்டு இருவர் கைது மற்றும் சிலரைத் தேடி வலைவீச்சு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 50 மீற்றர் அருகிலிருந்த தொலைத் தொடர்பு சாதனங்கள், அதன் உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை (13.01.2017) உடைத்து திருடப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது@ மேற்படி விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வழமை போன்று வியாழக்கிழமை இரவு 9.35 மணியளவில் விற்பனையை நிலையத்தை மூடி விட்டு வீடு சென்றுள்ளார். 



அதேவேளை, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.37 மணியளவில் அவரது கைப்பேசிக்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளிக் கமெராவிலிருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. 



அத்துடன் விற்பனை நியைலத்தின் முன்னாலும் பின்னாலும் பொருத்தப்பட்டிருந்த காணொளிக் கமெராக்கள் இயங்காமற் போயுள்ளன. 
விபரீதம் நடந்து விட்டதை அறிந்து கொண்ட அவர் உடனடியாக விற்பனை நிலையத்திற்கு வந்து பார்த்தபோது திருடர்கள் விற்பனை நிலையத்தின் பின்புறத்தால் பாய்ந்தோடி மரமொன்றில் ஏறி மறைந்திருப்பது தென்பட்டுள்ளது. 
உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸாரும் இணைந்து தப்பியோடிய திருடர்களைத் துரத்திச் சென்றபோது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். 



சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது திருட்டுக் குடும்பலில் மேலும் சிலர் இருப்பது தெரிய வந்துள்ளது. 
ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வேறு சில பகுதிகளிலும் இடம்பெறும் கடை உடைப்பு திருட்டுக்களில் இந்த கும்பலே ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 



தொலைத் தொடர்பு விற்பனை நிலையத்தில் பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பு இடம்பெறுவதாகவும் விற்பனை நிலைய உரிமையாளரான எஸ்.எம். நழீம் தெரிவித்தார். 




மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாரும் ஏறாவூர் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.’
SHARE

Author: verified_user

0 Comments: