(ALM.Sinas)
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டம் முழுமையாக எமது சமூகத்துக்கு கிடைக்காமல் போவதற்கு எம்மில் சிலரே தடையாக இருக்கின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தவிசாளரும் லக்சல நிறுவனத் தலைவருமான முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த ஆண்டை எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியிருக்கின்றார் - பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் சம்மாந் துறை தென்னம்பிள்ளை கிராமத்தில் நடைபெற்ற ஐம்பது வீட்டுத்திட்டப் பயனாளிகளை இனங்காணும் நிகழ்வில் உரையாற்றுகின்றபோதே இவ்வாறு கூறினார். இங்கு மேலும் உரையாற்றுகையில்;
இந்த ஆண்டை எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வறுமையை ஒழிக்கின்ற ஆண்டாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார். வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த அத்திவாரத்தை இட்டு மக்களை பொருளாதார ரீதியாகவும் சமூக சிந்தனை ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் சிறந்த விழுமியங்களை கடைப்பிடிக்கக்கூடிய பலமான சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான அடித்தளம் இப்புதுவருடத்திலிருந்து இடப்படவுள்ளது என்ற நல்ல செய்தியுடன் இங்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம்.
அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கு பல்வேறுபட்ட செயற்திட்டங்களை வகுத்திருக்கின்றது. ஆனால் அந்தத் திட்டங்கள் முழுமையாக எங்களை வந்தடைகின்றதா? என்று பார்க்கின்றபோது அது பெரிய ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலரே அவை எமது மக்களை வந்தடையாமல் முட்டுக்கட்டைகளைப்போட்டு தடையாக இருக்கின்றனர். மேலும் சமூகத்திலிருக்கின்ற பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் வேலையற்றோர் போன்றோரது வருமானங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கின்றது. உதாரணமாக இந்த வருடம் அறுபத்தையாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசு திட்டமிட்டிருக்கின்றது. அதில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. அதற்கு மேலாக சில அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் சில வீட்டுத்திட்டங்களை செய்திருக்கிறார்கள். அந்த வகையில்தான் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் பல அரச சார்புள்ள, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை தொடர்பு கொண்டு அடிப்படை வசதியற்ற ஏழை மக்களுக்கு முதற்கட்டமாக ஐம்பது வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார். இந்த வீட்டுத் திட்டம் முழுமையாக மற்றும் உண்மையாக பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களை வந்தடைய வேண்டும் என்பதில் நான் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளை அவர் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு எமது மக்களுக்கு வழங்கியமைக்கு மக்கள் சார்பாக நின்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் இச்செயற்திட்டத்தில் பலரையும் இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி பிரதி அமைப்பாளர் ஏ.எம்.காலித், ஸ்டார் வாழ்வாதார மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் தவிசளர் எம்.றபீக் மற்றும் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment