மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் ஆராயும் வகையில் விசேட மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக 70 ஆயிரத்திற்கு
மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக விஷேட மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட், மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் ஆகியோரின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வறட்சியான காலநிலையை எதிர்நோக்குதலும், உணவு பாதுகாப்பும், வறுமையில் இருந்து விடுவிக்கும் ஆண்டு என்ற தலைப்பில் இந்த விஷேட கூட்டம் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி காரணமாக 20 ஆயிரம் விவசாயிகள் உட்பட 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது, வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், வறட்சி தொடருமானால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.
அத்துடன் வறட்சியில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
உள்ளூராட்சி திணைக்களங்கள், பிரதேச செயலகம் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை என்பன இணைந்து குடிநீர் தட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
அத்துடன் வறட்சி தொடர்ச்சியாக இருக்குமானால் மூன்று மாத காலத்திற்கு மாத்திரமே குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
0 Comments:
Post a Comment