15 Jan 2017

அரச காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்கும் விஷேட இடம்பெயர் சேவை

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள அரச காணிகள் தொடர்பான
பிணக்குகளைத் தீர்க்கும் விஷேட இடம்பெயர் சேவை திங்கட்கிழமை (16.01.2017) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த இடம்பெயர் சேவையில்  பொது மக்கள் தங்களது பிரதேசங்களிலுள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்க வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண காணி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ் நிலைகளின்போது இவ்விரு பிரதேச செயலகப்  பிரிவுகளிலும் வசிக்கும்  பொதுமக்கள் தங்களது காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நீண்ட காலமாக முகங் கொடுத்து தீர்வின்றித் தடுமாறுவதனால் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த காணிப் பிணக்குகள் சம்பந்தமான அமர்வில் கிழக்கு மாகாண காணி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், மாவட்ட நில அளவை அத்தியட்சகர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், வனத் திணைக்கள அலுவலர்கள், காணிப் பயன்பாட்டு அலுவலர்கள், சமாதான நீதிவான்கள் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: