நாட்டில் இளைய சமுதாயத்தினரை கல்வி மற்றும் இன ஐக்கியத்தின்பால் வழி நடாத்துவதே தனது நோக்கம் என அகில இலங்கை ரீதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நான்காவது இளைஞர் நாடாளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டதுடன்
இளைஞர் நாடாளுமன்றத்தின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட மனோகரன் சுரேஷ்காந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாத் தொகுதியிலிருந்து தெரிவான இவர் அகில இலங்கை ரீதியில் 3264 விருப்பு வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்து இளைஞர் நாடாளுமன்ற அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட பட்டதாரியான இவர் தனது பதவிக் காலத்தில் ஆற்றவுள்ள எதிர்கால தூரநோக்குச் செயற்திட்டம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் அவர் விவரிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்குடாத் தொகுதியின் பின்புலத்திலிருந்து வந்தவன் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்வியில் பின்தங்கியிருக்கும் இளையோர் சமூகத்தை கல்வி மற்றும் தொழிற் பயிற்சியின்பால் ஊக்குவிக்க வேண்டிய சமகாலத் தேவையுள்ளது.
அதேவேளை, தேசிய ரீதியில் அனைத்து சமூக இளைஞர்களிடையேயும் இன ஐக்கியத்தைக் கட்டி வளர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.
இந்த நாடு ஐக்கியப்பட்ட, கல்வி அறிவில் மேம்பட்ட இளைஞர் சமுதாயத்திற்கூடாகவே சுபீட்சமடைய முடியும் என்பது எனது நம்பிக்கையும் பேரவாவுமாகும்” என்றார்.
புதன் மற்றும் வியான் (25, 26 திகதிகளில் ) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மஹரகமை தலைமையகத்தில் நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற முதல் நாள் அமர்வில் மனோகரன் சுரேஷ்காந்தன் உத்தியோக பூர்வமாக தனது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.
நடந்து முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் போனஸ் ஆசனங்கள் இரண்டு கிடைத்துள்ளதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஐந்தாக உள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் மூவர் ஆண்கள், இருவர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்காவது இளைஞர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டல் செயலமர்வு இம்மாதம் 16,17,18 ஆகிய திகதிகளில் பட்டங்கலை இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போதே தேசிய ரீதியில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று மனோகரன் சுரேஷ்காந்தன் இளைஞர் நாடாளுமன்றத்தின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment